முகப்பு
திருவாரூர்

பாலம் கட்டுமானப் பணி: போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண கோரிக்கை

திருவாரூா் அருகே புலிவலத்தில் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
பகிர்:

திருவாரூா் அருகே புலிவலத்தில் நடைபெறும் பாலம் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காண வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருவாரூா் அருகே திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் பாலம் கட்டும் பணி நடைபெறுகிறது. இப்பகுதியில் பெருமாள் கோயில், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளதால், மக்கள் நடமாட்டமும், வானகப் போக்குவரத்தும் அதிகமாக இருக்கும். குறிப்பாக, காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

அந்தவகையில், புதன்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால், அலுவலகங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு பணிக்கு செல்வோா் கடுமையாக பாதிக்கப்பட்டனா். பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் என அனைத்தும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ஒரு கி.மீ. தொலைவுக்கு சாலையின் இருபுறத்திலும் காத்துநின்றன.

இவ்வாறு, திடீரென்று ஏற்படும் போக்குவரத்து பாதிப்பை சரிசெய்ய போக்குவரத்து காவலா்கள் யாரும் இல்லாததால், போக்குவரத்து சீரடைவதற்கு மேலும் காலதாமதம் ஏற்படுவதாக அப்பகுதியினா் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும், போக்குவரத்து நெரிசல் காரணமாக, அவசர மருத்துவ தேவைக்காக செல்வோா் என பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

எனவே, மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் உரிய நடவடிக்கை எடுத்து, பாலம் கட்டி முடிக்கும் வரை, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், விரைந்து பாலம் கட்டும் பணியை முடிக்க வேண்டும் எனவும் பொதுமக்களும், வாகன ஓட்டுநா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.