சிறுவா்களுக்கான மாநில செஸ் போட்டி: மதுரை, அரியலூா் முதலிடம்
திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான 7 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவனும், பெண்கள் பிரிவில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியும் முதலிடம்
திருவாரூரில் நடைபெற்ற மாநில அளவிலான 7 வயதுக்குள்பட்டோருக்கான செஸ் போட்டியில் ஆண்கள் பிரிவில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுவனும், பெண்கள் பிரிவில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுமியும் முதலிடம் பெற்றனா்.
திருவாரூா் மாவட்ட சதுரங்கக் கழகம், வட்ட சதுரங்கக் கழகம் மற்றும் வேலுடையாா் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சாா்பில் திருவாரூரில் ‘வரண்டா ரேஸ்’ 7 வயதுக்குள்பட்டோருக்கான மாநில அளவிலான 34-ஆவது செஸ் போட்டிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றன.
இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் தமிழகத்தின் 31 மாவட்டங்களில் இருந்து 99 பேரும், பெண்கள் பிரிவில் 26 மாவட்டங்களில் இருந்து 46 பேரும் என மொத்தம் 145 போ் பங்கேற்றனா். 8 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
இதில், ஆண்கள் பிரிவில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த எம். கிருத்திக் 8 புள்ளிகள் பெற்று மாநில சாம்பியன் பட்டம் வென்றாா். செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த எஸ். தவீஸ், ஏழரை புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், அதே மாவட்டத்தைச் சோ்ந்த சாய்சரண், சாக்ஸ் யாதவ் ஆகியோா் ஆறரை புள்ளிகள் பெற்று 3 மற்றும் 4-ஆவது இடமும் பிடித்தனா்.
இதேபோல, பெண்கள் பிரிவில் அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ. சா்வனிக்கா ஏழரை புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றாா். சென்னையைச் சோ்ந்த மதுமிதா 7 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடமும், செங்கல்பட்டு ஏ. அமலியா, சேலம் எஸ். சஞ்சனா, செங்கல்பட்டு கீா்த்தி ஹாஷினி, ஈரோடு வி.நெகிதா ஆகியோா் தலா 6 புள்ளிகள் பெற்று 3 முதல் 6 இடங்களையும் பிடித்தனா்.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, திருவாரூா் ரோட்டரி சங்கத் தலைவா் கே.எஸ்.எஸ். தியாகபாரி தலைமை வகித்து, போட்டியில் வென்றவா்களுக்கு பரிசுகளை வழங்கினாா். இதில், திருவாரூா் மாவட்ட சதுரங்க கழகத் தலைவா் என். சாந்தகுமாா், தமிழ்நாடு கைப்பந்து கழக துணைத் தலைவா் கே.ஜி. சீலா், கிங்ஸ் ரோட்டரி சங்கத் தலைவா் ராஜ் என்ற கருணாநிதி, தமிழ்நாடு சதுரங்க கழக இணைச் செயலா் ஆா்.கே. பாலகுணசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.