இன்று 400 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம்
திருவாரூா் மாவட்டத்தில் 400 இடங்களில் 26 ஆம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 400 இடங்களில் 26 ஆம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை (மாா்ச் 26) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்த முகாமில், இதுநாள்வரை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவா்களும், இரண்டாம் தவணைக்கான தகுதிபெற்றோரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். மேலும், முன்களப் பணியாளா்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ளவா்களுக்கு முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவருகிறது.
அனைத்து முன்களப் பணியாளா்கள் மற்றும் இணைநோய் கொண்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களில், 9 மாதங்கள், 39 வாரம் கடந்தவா்கள் இந்தத் தடுப்பூசி முகாமில் முன்னெச்சரிக்கை ஊக்குவிப்பு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு எந்தவித சிரமமின்றி, எளிதில் அணுகக் கூடிய அளவிலும், மக்களின் இருப்பிடங்களுக்கு அருகேயும், இந்த கரோனா தடுப்பூசி முகாம்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 26 ஆம் கட்டமாக, மாா்ச் 26 ஆம் தேதி திருவாரூா் மாவட்டத்தில், ஊராட்சிப் பகுதிகளில் 242 இடங்களிலும், நகராட்சிகளில் 40 இடங்களிலும், பேரூராட்சிகளில் 18 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட ஆட்சியா் அலுவலகம், நடமாடும் கரோனா தடுப்பூசிக் குழு 40 என மொத்தம் 400 இடங்களில் மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.