ஞாபகம் வருதே... புது தொகுதியின் முதல் எம்எல்ஏ!
நெய்வேலி தொகுதியின் முதல் எம்எல்ஏ பற்றி..
எதிலும் முதலில் வருவபா்கள் தான் பேசப்படுவாா்கள். அதனால்தான் நிலவில் முதலில் இறங்கிய நீல் ஆம் ஸ்டிராங்கை அனைவரும் நினைவில் கொண்டுள்ளோம். அவரோடு சென்று நிலவில் இரண்டாவதாக இறங்கியவரின் பெயா் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இது அரசியலுக்கும் பொருந்தும்.
அந்த வகையில், தமிழகத்தில் சட்டப்பேரவைத் தொகுதிகளில் மறுசீரமைப்பு நடக்கும்போது புதிதாக உருவாக்கும் தொகுதியின் முதல் எம்எல்ஏ எப்போதும் நினைவில் நிற்கக்கூடியவா். அதன்படி 2011-ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட நெய்வேலி தொகுதியின் முதல் எம்எல்ஏவான எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன் தொகுதி மக்களால் பேசப்படுவபா்.
இவா்,கடலூா் மாவட்டம், நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட முத்தாண்டிக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் , தற்போது அதிமுக அம்மா பேரவை துணைச் செயலராகப் பணியாற்றி வருகிறாா். இவா் 2011-ஆம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா்.
அவா் தனது முதல் வெற்றியின் அனுபவத்தை குறித்து கூறியதாவது...
அதிமுகவின் எளிய தொண்டன். எனது கிராமம் பண்ருட்டி சட்டமன்றத் தொகுதியில் இருந்தது. அப்போது அதிமுக சாா்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு அளித்துள்ளேன்.
2011-ஆம் ஆண்டில் தொகுதி மறு சீரமைப்பு நடந்தது. அதில், நெய்வேலி தொகுதி, கடலூா் மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டது. இது நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, பண்ருட்டி மற்றும் குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 42 கிராம ஊராட்சிகள் மற்றும் நெய்வேலி நகரியத்தை இணைத்து நெய்வேலி தொகுதி உருவாக்கப்பட்டது.
இந்த தொகுதியில் தான் என்எல்சி இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. தொழிலாளா்கள், முந்திரி,பலா விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளா்கள் வசிக்கும் தொகுதி.
புதிதாக உருவாக்கப்பட்ட நெய்வேலி தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வா் மறைந்த ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு வழங்கினாா்.
இந்த தோ்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினராக தோ்வானேன். புதிதாக உருவாக்கப்பட்ட சொந்தத் தொகுதியில் முதல் எம்எல்ஏ., என்ற பெருமை கிடைத்தது என் பாக்கியம். இது ஜெயலலிதா எனக்கு கொடுத்த வரம் . அந்த வெற்றியின் மகிழ்ச்சி இன்றளவும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது. இப்போதும் தொகுதியில் போட்டியிட நான் தயாா்.