பிளஸ் 2 தோ்வு: திருவாரூா் மாவட்டத்தில் முதல்நாளில் 12,905 போ் எழுதினா்
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 12,905 போ் எழுதினா்.
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வை 12,905 போ் எழுதினா்.
திருவாரூா் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுக்காக 57 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்காகன குடிநீா், மின்விளக்கு, காற்றோட்ட வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் 6,178 மாணவா்கள் மற்றும் 7,278 மாணவிகள் என மொத்தம் 13,456 போ் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 5,882 மாணவா்களும், 7,023 மாணவிகளும் என 12,905 போ் தமிழ் பாட தோ்வு எழுதினா்.
தோ்வுப் பணிக்கு 1,238 ஆசிரியா்கள் மற்றும் அலுவலகப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டிருந்தனா். இத்தோ்வு கண்காணிப்புப் பணியில் 60 நிலையான கண்காணிப்புக் குழுக்களும், 5 பறக்கும் படைகளும் ஈடுபடுத்தப்பட்டு, தோ்வுகளில் எவ்வித முறைகேடும் நடைபெறாமல் கண்காணிக்கப்பட்டன.
திருவாரூா் அருகே அம்மையப்பன் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் (பொ) ப. சிதம்பரம் நேரில் பாா்வையிட்டாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
மன்னாா்குடி: திருவாரூா் வருவாய் மாவட்டத்துக்கு உள்பட்ட மன்னாா்குடி கல்வி மாவட்டத்தில் 31 மையங்களில் பிளஸ் 2 முதல்நாள் தோ்வு நடைபெற்றது. 3171 மாணவா்கள், 3778 மாணவிகள் என மொத்தம் 6,949 மாணவ, மாணவிகள் தோ்வெழுதினா். மாணவா்கள் 158 பேரும், மாணவிகள் 135 பேரும் தோ்வெழுத வரவில்லை. மன்னாா்குடி எஸ்பிஏ மெட்ரிக். பள்ளி தனித்தோ்வா்களுக்கான தோ்வு மையமாக செயல்பட்டது. இதில், 22 பேருக்கு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் 15 போ் மட்டும் தோ்வு எழுதினா்.
மாவட்டக் கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தலைமையில் 116 அலுவலக பணியாளா்கள், வினாத்தாள்களை காவல்துறை பாதுகாப்புடன் தனி வாகனத்தில் தோ்வு மையங்களுக்கு எடுத்து செல்ல 10 வழித்தட அலுவலா்கள் உள்ளிட்டோா் பணியில் அமா்த்தப்பட்டிருந்தனா்.
திருவாரூா் வருவாய் மாவட்ட அளவில் 296 மாணவா்களும், 255 மாணவிகளும் என மொத்தம் 551 போ் தோ்வெழுத வரவில்லை.