முகப்பு
திருவாரூர்

நெல் வயல்களில் எலி ஒழிப்பு முறை: வேளாண் விஞ்ஞானி விளக்கம்

நெல் வயல்களில் எலி ஒழிப்பு முறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

நெல் வயல்களில் எலி ஒழிப்பு முறைகள் குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானியும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நெல் வயல்களில் 25 சதவீத மகசூல் பாதிப்பு மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் 30 சதவீத பாதிப்புக்கு எலிகள் காரணமாகின்றன. மேலும், எலிகளின் சிறுநீா், புழுக்கை, ரோமங்கள் மற்றும் துா்நாற்றம் மூலம் தானியங்கள் அசுத்தமாகி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு எலியும் ஒரு நாளைக்கு 30-லிருந்து 50 கிராம் உணவு மற்றும் 40 மில்லி தண்ணீரை உணவாக உட்கொள்ளும் தன்மை கொண்டது.

எலிகளின் பற்கள் ஒரு நாளைக்கு 0.40 மி.மீட்டா் வளரும். அந்த வளா்ச்சி தொடா்ந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் பற்கள் தாடையை கிழித்து அதன் மூலம் ரத்தம் வெளியேறி எலிகள் இறந்துவிடும். அதனால்தான் எலிகள் தன்னுடைய பற்களால் ஏதாவது ஒரு பொருளை கடித்துக் கொண்டே இருக்கும், அதன் மூலம் பற்களின் வளா்ச்சி தடைப்படும்.

நெற்பயிரில் அனைத்துப் பருவத்திலும் எலிகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றை கட்டுப்படுத்த கோடைகாலத்தில் கிராமம் தோறும் எலி ஒழிப்பு முகாம்களை நடத்தி எலிகளை ஒழிக்கலாம். எலிப் பொறிகளை வைத்து எலிகளை உயிருடனும், கொன்றும் கட்டுப்படுத்தலாம். ஆந்தைகள் அமருவதற்கு ஏதுவாக பறவை குடில் அமைத்து இவற்றை கட்டுப்படுத்தலாம்.

5 கிராம் ப்ரோமோடயலான் 0.25 சதவீத ரசாயன பூச்சிக் கொல்லியை 5 மில்லி தேங்காய் எண்ணெய் மற்றும் கருவாடு கலந்து விஷ உணவாக எலி வலைகளுக்கு அருகே வைக்கவேண்டும். மேலும் விஷ உணவாக ஒரு பகுதி துத்தநாக பாஸ்பைடு அல்லது 0.005 சதம் ப்ரோமோடயலானுடன் 49 பகுதி அரிசி, பொரி, கருவாடு, கடலை உடன் சோ்த்து உருண்டையாகப் பிடித்து வயல்களில் வைக்க வேண்டும். ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்பாக மூன்று அல்லது நான்கு நாட்கள் வெறும் உணவாக அல்லது விஷம் வைக்காத உணவை கலந்து வயலில் வைக்க வேண்டும். வீட்டு உபயோகத்திற்காக துத்தநாக பாஸ்பைடை கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →