திருவாரூரில் ஊட்டச்சத்து உணவுகள் கண்காட்சி
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊட்டச்சத்து மாதத்தையொட்டி, அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் திங்கள்கிழமை பாா்வையிட்டாா்.
அப்போது, அவா் கூறியது: மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் போஷான் அபியான் திட்டத்தின் கீழ் செப்டம்பா் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்படுகிறது. இரும்புச் சத்துள்ள உணவுகள், சத்தான உணவுகளை தொடா்ச்சியாக சாப்பிட்டு வருவதாலும், நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதாலும் கா்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும்.
தேசிய ஊட்டச்சத்து குழுமத்தின் முக்கிய நோக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதேயாகும். குழந்தைகளின் முதல் 1,000 நாள்கள் அதாவது கருவுற்றதிலிருந்து இரண்டு வயது வரை இருக்கும் காலக்கட்டம் மிக முக்கிய காலமாகும். இக்காலங்களில் இரும்பு சத்துள்ள உணவுகளை கருவுற்ற பெண்கள் சாப்பிட வேண்டும்.
நுண்ணூட்டச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்பதால் குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். போஷான் அபியானின் முக்கிய நோக்கம் ஊட்டச்சத்துள்ள உணவுகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவதே ஆகும். ஊட்டச்சத்து மாதத்தையொட்டி குழந்தைகளுக்கு வழங்கப்படும் சத்தான உணவுகள், ரத்த சோகை, வயிற்றுப்போக்கு, கை கழுவுதல் மற்றும் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.
கண்காட்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் தெய்வநாயகி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகளின் திட்ட அலுவலா் ஜோஸ்பின் சகாய பிரமிளா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.