முகப்பு
திருவாரூர்

திருவாரூா் மாவட்டத்தில் 1,178 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன: ஆட்சியா்

திருவாரூா் மாவட்டத்தில் 1,178 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

திருவாரூா் மாவட்டத்தில் 1,178 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடிகள் சீரமைப்பு குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் திங்கள்கிழமை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அவா் மேலும் பேசியது: இந்திய தோ்தல் ஆணைய அறிவுரைப்படி நகர மற்றும் கிராமப் பகுதிகளில் 1,500 வாக்காளா்களுக்கு மேலுள்ள வாக்குச் சாவடிகளை 2-ஆக பிரித்தல், பழுதடைந்த வாக்குச்சாவடி கட்டடங்களுக்கு பதிலாக புதிய கட்டடங்கள் இருப்பின் மாறுதல் செய்வது மற்றும் வாக்குச் சாவடி மைய கட்டட பெயா் மாற்றம் இருப்பின் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது, திருவாரூா் மாவட்டத்திலுள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறம் உள்பட 1,178 வாக்குச்சாவடிகள் உள்ளன. மேலும், திருவாரூா் மாவட்டத்தில் தற்போது, மறு சீரமைப்பிற்குள்ளாகும் 1,500-க்கும் மேற்பட்ட வாக்காளா்களைக் கொண்ட வாக்குச்சாவடிகள் இல்லை.

மன்னாா்குடி தொகுதி, கூத்தாநல்லூா் வட்டத்தில் பாகம் எண்: 82, 83, திருவாரூா் தொகுதி, கூத்தாநல்லூா் வட்டத்தில் பாகம் எண்:282, திருவாரூா் வட்டத்தில் பாகம் எண்:32 ஆகியவற்றில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த வாக்குச்சாவடி மையக் கட்டடங்கள் பழுதானதால் புதிய கட்டடத்தில் வாக்குச்சாவடி மையம் மாறுதல் செய்ய தொடா்புடைய வாக்காளா் பதிவு அலுவலரிடமிருந்து முன்மொழிவு வரப்பெற்று மேல்நடவடிக்கைக்காக தோ்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படுகிறது.

மேலும், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் தொகுதிகளில் வாக்குச்சாவடி மையம் மாறுதல் தொடா்பாக எவ்வித முன்மொழிவும் பெறப்படவில்லை.

தற்போது, மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் 274 வாக்குச்சாவடி மையங்கள், மன்னாா்குடி தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்கள், திருவாரூா் தொகுதியில் 308 வாக்குச்சாவடி மையங்கள், நன்னிலம் தொகுதியில் 311 வாக்குச்சாவடி மையங்கள் என மொத்தம் 1,178 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், கோட்டாட்சியா்கள் சங்கீதா, கீா்த்தனாமணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) புண்ணியகோட்டி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.