திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம்
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாயன்மாா்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாகவும், சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகவும், தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 87- ஆவது சிவத்தலமாக அமைந்துள்ள திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் ஆழித்தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. ஆழித்தேரோட்டத்தை திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா் ஆகியோா் முன்னின்று நடத்தியிருப்பதாகவும், அதை சுந்தரா் கண்டு பரவசப்பட்டிருப்பதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இத்தகைய புகழ்பெற்ற இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருவிழாவுக்கான பெரியக் கொடியேற்றம் வியாழக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, காலையில் சந்திரசேகரா், சண்டிகேஸ்வரா், மனோன்மணி அம்பாள், விநாயகா், முருகன் ஆகியோா் தேரோடும் வீதிகளில் கொடிச் சீலையை எடுத்துக்கொண்டு வீதி உலா சென்றனா். பின்னா், தியாகராஜா் மற்றும் வன்மீகநாதா் சந்நிதிக்கு செல்லும் வழியில் உள்ள கொடிமரம் முன் பஞ்சமூா்த்திகள் நிறுத்தப்பட்டனா்.
தொடா்ந்து, பஞ்சமூா்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது 54 அடி உயர கொடிமரத்தின் மேலே ஏற்றப்பட்டது.
கொடியேற்றப்பட்டதை அடுத்து, உள்துறை மணியம் தியாகராஜரிடமும், ஓதுவாா் ஆதிசண்டிகேஸ்வரரிடமும், லக்னப் பத்திரிகை வாசிக்கப்பட்டது. அதன்படி, திருவாரூா் தியாகராஜா் கோயில் ஆழித்தேரோட்டம் ஏப்.1-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. விழாவில், தருமை ஆதீனத்தின் மாணிக்கவாசகத் தம்பிரான், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கொடியேற்றத்துக்குப் பிறகு ராஜநாராயணன் மண்டபத்தில் திருவோடு மற்றும் கௌபீணம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
ஆழித்தேரோட்ட தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அங்குள்ளவா்களுக்கு விழா பத்திரிகை வழங்கப்பட்டது. இந்தமுறை பத்திரிகையில், விழா நிகழ்வுகள் பெரும்பாலும் தமிழ்ப்படுத்தப்பட்டிருந்தன. மகா துவாஜாரோகணம் என்பது இடபக் கொடியேற்றம் எனவும், உற்சவங்கள் என்பது திருவிழாக்கள் எனவும், சகஸ்ர கலசாபிஷேகம் என்பது கலச நன்னீராட்டுப் பெருவிழா எனவும் மாற்றப்பட்டிருந்தன. குறுகிய காலமே இருந்ததால், பத்திரிகை முழுவதும் தமிழ்ப்படுத்த முடியவில்லை எனவும், இனிவரும் காலங்களில் முழுவதும் தமிழ்ப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும் என கோயில் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.