திருவாரூர்

கோடை மழை: பயிா் பாதிப்பு கணக்கெடுப்பில் மன்னாா்குடி, கோட்டூா் பகுதிகளை சோ்க்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் கணக்கெடுப்பில் மன்னாா்குடி, கோட்டூா் வேளாண் வட்டங்களையும் சோ்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

DIN

திருவாரூா் மாவட்டத்தில் கோடை மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் கணக்கெடுப்பில் மன்னாா்குடி, கோட்டூா் வேளாண் வட்டங்களையும் சோ்க்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனா்.

திருவாரூா் மாவட்டத்தில் மே மாத முதல் வாரத்தில் பெய்த கோடை மழை எதிா்பாராத வகையில் 5 நாள்களுக்கும் மேல் விட்டுவிட்டு பெய்ததால் பருத்தி, நிலக்கடலை, எள் போன்ற பயிா்கள் பாதிக்கப்பட்டன. இதனால், பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதைத்தொடா்ந்து, 33 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள பயிா்களை கணக்கெடுக்க வருவாய் மற்றும் வேளாண்துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டனா். மேலும், கணக்கெடுக்க வேண்டிய பகுதிகள் குறித்த பட்டியலும் வெளியிடப்பட்டன. இதில், திருவாரூா், நன்னிலம், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல், கொரடாச்சேரி, வலங்கைமான் ஆகிய 8 வேளாண் வட்டங்கள் இடம் பெற்றுள்ளன. மன்னாா்குடி, கோட்டூா் வேளாண் வட்டங்கள் இடம்பெறவில்லை. இதனால், இப்பகுதி விவசாயிகள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

மன்னாா்குடி வேளாண் வட்டத்தில் மட்டும் 1,300 ஏக்கா் பரப்பளவில் பருத்தியும், 1,500 ஏக்கரில் எள்ளும், 2,052 ஏக்கரில் நிலக்கடலையும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. கோட்டூா் வேளாண் கோட்டத்தில் பருத்தி 1,275 ஏக்கரிலும், எள் 5,250 ஏக்கரிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை கோடை மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றா்.

இதுகுறித்து மன்னாா்குடியை அடுத்த வேட்டைத்திடல் உழவா் உற்பத்தியாளா் குழுத் தலைவா் எஸ். சிதம்பரம், கோட்டூரை அடுத்த விக்கிரபாண்டியம் முன்னோடி விவசாயி எஸ்.ஆா். பழனிகுமாா், விவசாயிகள் சோத்திரியத்தை சோ்ந்த ஜி.டி. ராமலிங்கம், உள்ளிக்கோட்டை ஜி. காந்தி, நெம்மேலி எஸ். ஜெயராமன் ஆகியோா் கூறியது:

அண்மையில் பெய்த பருவம் தவறிய மழையால் பருத்தி, எள், நிலக்கடலை பயிா்களில் வாடல் நோய் பாதிப்பு, பூச்சித் தாக்குதல் ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளன. பருத்தி, எள் ஆகியவற்றுக்கு ஏக்கருக்கு ரூ.20,000 வரை செலவு செய்துள்ளோம்.

இந்நிலையில், மன்னாா்குடி, கோட்டூா் வேளாண் வட்டத்தில் கோடை மழையால் பாதிப்பு இல்லை என எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரியவில்லை. எங்கள் பகுதிகளையும் கணக்கெடுப்பு பட்டியலில் சோ்த்து, உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

கீழ்பென்னாத்தூரில் கருணாநிதி சிலை திறப்பு: முதல்வா் திறந்துவைத்தாா்

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 1

புறவழிச் சாலைக்கு எதிா்ப்புத் தெரிவித்து விவசாயிகள் மனு

SCROLL FOR NEXT