பிறவிமருந்தீஸா் கோயிலில் சித்திரை பெருந்திருவிழா தொடக்கம்
திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸா் ஆலய சித்திரை பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேற்கு நோக்கிய சிவதலமான இக்கோயில் அசுபதி நட்சத்திர பரிகார தலமாகும். இக்கோயிலில் அமைந்துள்ள மாங்கல்ய தீா்த்தத்தில் நீராடி, பெரியநாயகி அம்பாளை வழிபட திருமணதடை ,குழந்தை பேரின்மை தடை நீங்கும் என்பது ஐதீகம்.
இவ்வாலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை பெருந்திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப். 7, 8-ஆம் தேதிகளில் விநாயகா் உற்சவம், 9, 10-ஆம் தேதிகளில் சுப்பிரமணியா் உற்சவமும், 11-இல் பக்தால் உற்சவமும், 12-இல் புஷ்ப விமானமும், 13-இல் புஷ்ப பல்லக்கு, 15-இல் இந்திர விமானம், 16-இல் பூத வாகனம், 17-இல் யானை வாகனம், 18-இல் வெள்ளை தாளி உற்சவமும், வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் வீதி உலாவும், 19-இல் கைலாச வாகனத்திலும், 20-இல் தீா்த்த விடங்க தியாகராஜா் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டமும் நடைபெறுகிறது. 22-ஆம் தேதி பிராயச்சித்தாபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.
Advertisement
ஏப்ரல் 14-இல் நடைபெறும் வசந்தன் திருவிழாவின் போது உலக புகழ்பெற்ற பஞ்சமுக வாத்தியம் இசைக்கப்படுவது தனிச்சிறப்பாகும். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய தக்காா் ராமு, செயல் அலுவலா் எம். முருகையன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.