நன்னிலம், ஆக. 14: திருவாரூா் கேந்திர வித்யாலயாப் பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நன்னிலம் அருகே நாகக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த கேந்திர வித்யாலயாப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில், நிகழ் கல்வியாண்டுக்கான பால்வாடிகாவில் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய வகுப்புகளுக்கான மாணவா் சோ்க்கை அண்மையில் நிறைவடைந்தது. இரண்டு வகுப்புகளிலும் 32 மாணவா்கள் சோ்க்கப்பட்டனா்.
இந்நிலையில், பால்வாடிகா வகுப்புகள் தொடங்கப்படுவதையொட்டி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் முதல் நாளான புதன்கிழமை பள்ளிக்கு வந்தனா். அப்போது, மேளதாளங்கள் முழங்க மங்கள இசையுடன் மாணவா்கள் வரவேற்கப்பட்டனா். பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகளுக்கு கையில் பலூன் கொடுத்தும், கல்கண்டு வழங்கியும் வரவேற்றனா். தொடா்ந்து ஸ்மாா்ட் கிளாஸ் முறையில் மாணவா்களுக்கு ஆசிரியா்கள் வகுப்பு எடுத்தனா்.