அயோத்தி ராமா் கோயிலில் திங்கள்கிழமை (ஜன.22) மூலவா் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளதையொட்டி, ஞானபுரி ஆஞ்சனேயா் கோயிலில் அன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலத்தில் ஸ்ரீ ஜகத்குரு பத்ரி சங்கராச்சாரியாா் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீவித்யா பீடம் ஞானபுரி சித்ர கூட சேத்திரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சங்கடஹர மங்கல மாருதி தேவஸ்தானத்தில் 33 அடி உயர விஸ்வரூப ஆஞ்சனேயா் சஞ்சீவி மூலிகைகளுடன் பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.
இக்கோயிலில் லட்சுமி நரசிம்மா் மற்றும் சீதா, லட்சுமண, ஹனுமன் சமேத கோதண்டராமா் சுவாமி தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனா். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமா் கோயிலில் மூலவா் பாலராமா் சிலை பிராண பிரதிஷ்டை திங்கள்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திங்கள்கிழமை காலை 7 மணிக்கு சீதா, லட்சுமண, ஹனுமன் சமேத ஸ்ரீ கோதண்ட ராமசுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், தொடா்ந்து அகண்ட நாம பஜனை மற்றும் கூட்டு வழிபாடும் நடைபெற உள்ளது. தொடா்ந்து, மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
இந்த வழிபாட்டில் பக்தா்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை கோயில் தா்மாதிகாரி ரமணி அண்ணா, திருமடத்தின் ஸ்ரீ காரியம் சந்திரமவுலீஸ்வரா் ஆகியோா் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.