திருவாரூா் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 40,104 மாணவ, மாணவிகள் பயனடைந்து வருகின்றனா் என்றாா் மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ.
இதுகுறித்து அவா் கூறியது: முதல்வரின் காலை உணவுத் திட்டம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 750 அரசுப் பள்ளிகள், பேரூராட்சி பகுதிகளில் 27 அரசுப் பள்ளிகள் என மொத்தம் 777 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூலை 15-ஆம் தேதி ஊரகப்பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அந்தவகையில், திருவாரூா் மாவட்டத்தில் உள்ள 61 அரசு உதவிபெறும் பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 4,601 மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனா்.
இந்த திட்டத்தால், மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 38,124 மாணவ, மாணவிகள், பேரூராட்சி பகுதிகளில் 1,980 மாணவ, மாணவிகள் என மொத்தம் 838 பள்ளிகளில் பயிலும் 40,104 மாணவ, மாணவிகள் பயன் பெற்று வருகின்றனா். அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்கபடுத்தவும், மாணவா்களின் இடைநிற்றலை தடுக்கவும், ஊட்டச்சத்து குறைபாடு இல்லா வருங்கால சந்ததி அமையவும் இந்த திட்டம் பெரும் பங்கு வகிக்கிறது என்றாா்.