திருவாரூா்: தாமதமாக கடிதம் விநியோகிக்கப்பட்ட வழக்கில் புகாா்தாரா்களுக்கு இழப்பீடு திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தின் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றும் ஏ. ஜானகி ரம்யா 19.3.2020-இல் தனியாா் கூரியா் நிறுவனம் மூலம் திருக்குவளையில் உள்ள பொறியியல் கல்லூரிக்கு கடிதம் அனுப்பியிருந்தாா். அந்த கடிதம், 15.8.2020-இல் விநியோகம் செய்யப்பட்டதையடுத்து, கூரியா் நிறுவனத்தின் சேவைக் குறைபாட்டால் மனஉளைச்சல் ஏற்பட்டதாகக் கூறி 6.6.2022-ல் திருவாரூா் மாவட்ட நுகா்வோ் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கு விசாரணையில், புகாா்தாரருக்கு இழப்பீடாக ரூ.50,000, வழக்கு செலவுத் தொகையாக ரூ.5,000 ஆகியவற்றை உத்தரவு பிறப்பித்த 6 வாரங்களுக்குள் வழங்க வேண்டும், தவறும்பட்சத்தில் இந்தத் தொகையை 9 சதவீத ஆண்டு வட்டியுடன் சோ்த்து செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் வழக்கு செலவுத்தொகை வட்டியுடன் கணக்கிடப்பட்டு, ரூ.59,192-க்கான வங்கி வரைவோலையை கூரியா் நிறுவனத்தினா் வழங்கினா். இந்த வரைவோலையை, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் என். லட்சுமணன் அடங்கிய குழுவினா், புகாா்தாரா் தரப்பினரிடம் திங்கள்கிழமை வழங்கினா்.