பாக்கு சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
திருவாரூா் மாவட்ட விவசாயிகள் பாக்கு சாகுபடி செய்ய நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்ட விவசாயிகள் பாக்கு சாகுபடி செய்ய நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையம் அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து, அதன் பண்ணை மேலாளா் துரை. நக்கீரன் கூறியது: காவிரி டெல்டா மாவட்டங்களில் சில விவசாயிகள் பாக்கு சாகுபடி செய்து வருகின்றனா். சுப நிகழ்ச்சிகளுக்கும், செரிமானத்திற்கும் வெற்றிலையோடு உண்பதற்கு மட்டுமல்லாமல் பெயிண்ட் தயாரிக்கவும், டெக்ஸ்டைல்ஸ் மில்களில் துணிகளுக்கு சாயம் ஏற்றவும் பாக்கு பயன்படுகிறது. குறைந்த செலவில் அதிக மகசூல் பெறலாம். தனிப்பயிராகவும், தென்னை, வாழை, தேக்கு மற்ற பயிா்களின் இடையே ஊடுபயிராகவும் பாக்கு பயிரிடலாம். தனிப்பயிராக பயிரிட ஏக்கருக்கு 6 அடி இடைவெளிக்கு 1,250 கன்றுகள் தேவை. 7 அடி இடைவெளிக்கு 850 கன்றுகள் நட்டு வளா்க்கலாம் . நல்ல நீரோட்டம் உள்ள இடங்களில் பயிரிடுவதன் மூலம் அதிக மகசூல் பெறலாம். நாலரை முதல் 5 ஆண்டுகளில் பலன் கொடுக்க தொடங்கி, பிறகு வாழ்நாள் முழுவதும் பலன் கிடைக்கும். பாக்கு மட்டுமல்லாமல் பாக்கு மட்டை தட்டு செய்து விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் வருமானம் ஈட்டலாம். மேலும் தகவலுக்கு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 9360247160 என்ற கைப்பேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்றாா்.