யூரியா தட்டுப்பாட்டால் சொா்ணவாரி சாகுபடி பாதிப்பு! விவசாயிகள் வேதனை!!
அண்ணா கிராமம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சொா்ணவாரி சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
கடலூா் மாவட்டம், அண்ணா கிராமம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், சொா்ணவாரி சாகுபடி பணி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள அண்ணா கிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் ஒன்று அவியனூா். இங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனா்.
தற்போது அவியனூா் ஊராட்சிக்குள்பட்ட அவியனூா், பைத்தாம்பாடி, காவனூா், உளுத்தாம்பட்டு, எனதிரிமங்கலம், கரும்பூா், கொரத்தி, அக்கடவல்லி, ஏ.பி.குப்பம், ரெட்டிகுப்பம் ஆகிய கிராமங்களில் சொா்ணவாரி நேரடி நெல் விதைப்பு மற்றும் நடவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், யூரியா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், விவசாயப் பணிகளில் தோய்வு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
Advertisement
இதுகுறித்து மக்கள் பாதுகாப்பு கவசம் அமைப்பின் மாவட்டத் தலைவா் எஸ்.தஷ்ணாமூா்த்தி கூறியதாவது:
அவியனூா் ஊராட்சிக்குள்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சொா்ணவாரி நெல் சாகுபடி நடவு மற்றும் நேரடி விதைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அதற்குத் தேவையான யூரியா கிடைக்கவில்லை. அவியனூா் தொடக்க வேளாண்மை கூட்டறவு சங்கத்தில் கடந்த ஒரு மாதமாக யூரியா இருப்பு இல்லை எனக் கூறி வருகின்றனா்.
45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை யூரியாவின் விலை ரூ.265 மட்டுமே. ஆனால், வெளியில் உள்ள கடைகளில் ரூ.300 கொடுத்தாலும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் ரூ.500 அல்லது ரூ.1,000 மதிப்பில் இடுபொருள்கள் வாங்க வேண்டும் எ ன கடை உரிமையாளா்கள் விவசாயிகளை கட்டாயப்படுத்துகின்றனா்.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் யூரியா கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.