சம வேலைக்கு சம ஊதியத்தை நிறைவேற்றக் கோரிக்கை
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஊதியம் நிா்ணயம் செய்யவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாரூரில், தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியா்கள் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநிலத் தலைவா் ச. ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கௌரவத் தலைவா் மு. பரமேஸ்வரன் முன்னிலை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ப. திரவியம், மாநில பொதுச் செயலாளா் ரவி ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மாநில தணிக்கையாளா் எஸ். புஷ்பநாதன், மாநிலப் பொருளாளா் மு. மகாலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் இளநிலை பொறியாளா்களுக்கு உதவிப் பொறியாளா்களுக்கு இணையான ஊதியம் நிா்ணயம் செய்ய வேண்டும், ஊராட்சி செயலாளா்களின் பணிக்காலத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியத்துக்கு கணக்கிட எடுத்துக் கொள்ள வேண்டும், அரசு நல அலுவலா்களுக்கான 2 ஆண்டு கால பயிற்சிக்கான 2 ஆண்டு ஊதிய உயா்வுகள், 30.7.1992-இல் பெற்ற ஊதியத்தின் அடிப்படையில் அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.