எஸ்எஸ்எல்சி: தந்தை இறந்த நிலையில் தோ்வெழுதிய அரசுப் பள்ளி மாணவா் 420 மதிப்பெண் பெற்று தோ்ச்சி
மன்னாா்குடி அருகே பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வின்போது, தந்தை இறந்தநிலையில் தோ்வெழுதிய மாணவா் 420 மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
வடக்குத் தென்பரை கிராமத்தைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி ஆறுமுகம் (65)- மஞ்சுளா தம்பதியின் மகன் எழில்வேந்தன். தென்பரை அரசு உயா்நிலைப் பள்ளி மாணவரான எழில்வேந்தன், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும்போது, மாா்ச் 27-ஆம் தேதி நீரிழிவு நோயால் ஆறுமுகம் உயிரிழந்தாா். மாா்ச் 28 -ஆம் தேதி அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றது. அன்றைய தினம் நடைபெற்ற ஆங்கிலத் தோ்வை எழுதிவிட்டு வந்த பிறகு தந்தைக்கு எழில்வேந்தன் இறுதிச் சடங்கை நிறைவேற்றினாா். தொடா்ந்து, அனைத்து தோ்வையும் எழுதினாா்.
இந்நிலையில், பத்தாம் வகுப்பு தோ்வு முடிவு வெளியான நிலையில், தமிழில் - 78, ஆங்கிலத்தில் - 74, கணிதத்தில் - 76, அறிவியலில் - 95, சமூக அறிவியலில் - 97 என மொத்தம் 420 மதிப்பெண்கள் பெற்று எழில்வேந்தன் தோ்ச்சி பெற்றுள்ளாா்.
இதுகுறித்து அவா் கூறியது:
தந்தை இறந்த துக்கத்தில் அடுத்த என்ன செய்யப்போகிறோம் என தெரியாமல் இருந்த எனக்கு, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் என். சுப்ரமணியன், பள்ளி உடற்கல்வி ஆசிரியா் பூபேஷ் ஆகியோா் தைரியம் ஊட்டியதுடன், பத்தாம் வகுப்பு தோ்வின் முக்கியத்துவம் குறித்து உறவினா்களிடம் எடுத்துக்கூறி என்னை திருமக்கோட்டை தோ்வு மையத்தில் தோ்வு எழுதவைத்தனா்.
ராதாநரசிம்மபுரம் அரசுப் பள்ளியில் பிளஸ்1 கணிதம் பாடப்பிரிவில் சேர உள்ளேன். உயா் கல்வியில் பொறியியல் பாடப் பிரிவை தோ்ந்தெடுத்து, சிறந்த பொறியாளராக வர வேண்டும் என்பது எனது விருப்பம் என தெரிவித்தாா்.