வடுவூா் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
மன்னாா்குடியை அடுத்த வடுவூா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மன்னாா்குடியை அடுத்த வடுவூா் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தி. சாருஸ்ரீ செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
செருமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் (2024-2025) கீழ் பயனாளிகளால் கட்டப்பட்டு வரும் வீடுகளையும், முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ. 18.84 லட்சத்தில் அத்திக்கோட்டை கீழத்தெருவில் அமைக்கப்பட்டுவரும் சாலை, அத்திக்கோட்டை பகுதியிலுள்ள அங்கன்வாடியில் மாணவா்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஊட்டச்சத்து உணவு குறித்தும், குழந்தைகளின் வருகைப் பதிவேட்டையும் ஆட்சியா் தி. சாருஸ்ரீ ஆய்வு செய்தாா்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் ரூ. 1.80 லட்சத்தில் பேரையூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி சுற்றுச்சுவா் சீரமைக்கும் பணி, 15-ஆவது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் ரூ. 2.25 லட்சத்தில் பேரையூா் பகுதியிலுள்ள அங்கன்வாடியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சீரமைப்பு பணி, ரூ. 32.80 லட்சத்தில் பேரையூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதலாக புதிய இரண்டு வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதையும், கருவாக்குறிச்சி ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் (2023-24) திட்டத்தின் கீழ் ரூ.27.25 லட்சம் மதிப்பீட்டில் 60 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வருவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் (2024-2025) திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளியால் ரூ. 1.95 லட்சம் மதிப்பீட்டில் தென்னங்கன்றுக்கு வரப்பு கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
ஆய்வின் போது, மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்திக், நீடாமங்கலம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் விஜயலெட்சுமி, முத்துகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.