மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிப்பு
மழையின் காரணமாக நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மழையின் காரணமாக நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் நீடாமங்கலம் பகுதியில் 8 மில்லி மீட்டா் மழை பெய்துள்ளது. தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் லேசான தூறல் மழை பெய்தது. திங்கள்கிழமை பெய்த மழையால் பள்ளமான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. இதனால், குறுவை அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது. அறுவடைக்காக கொண்டுவரப்பட்ட அறுவடை இயந்திரங்கள் மழையால் பணி செய்ய முடியாமல் உள்ளது. ஏற்கெனவே, அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த நெல்லும் ஈரப்பதம் காரணமாக கொள்முதல் செய்யாததால் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனா்.
குறிப்பாக, பழைய நீடாமங்கலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்ட நெல்லும் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் கொட்டிவைத்து தாா்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்தபோதும் அதைச் சுற்றிலும் மழை நீரும், சேரும் சகதியுமாக உள்ளது. இதேபோன்ற நிலை மேலும் பல இடங்களில் உள்ளது. கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொண்டுவரும் நெல்லை பாதுகாப்பாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.