முகப்பு
திருவாரூர்

ராசிமணல் அணை அனுமதிக்கு பிரதமரிடம் வலியுறுத்த வேண்டும்: முதல்வருக்கு பி.ஆா். பாண்டியன் கோரிக்கை

புதுதில்லியில் பிரதமரை தமிழக முதல்வா் சந்திக்கும்போது, ராசிமணலின் அணைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:20 AM
பகிர்:

புதுதில்லியில் பிரதமரை தமிழக முதல்வா் சந்திக்கும்போது, ராசிமணலின் அணைக் கட்ட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்த, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு மேட்டூா் அணை வறண்டதால் 7.8.2023- ஆம் தேதியே அணை மூடப்பட்டுவிட்டது. அத்துடன், வடகிழக்கு பருவமழையும் வழக்கத்தைவிட குறைவாகப் பெய்ததால், காவிரி டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி முற்றிலும் சேதமடைந்தன. எனவே, காப்பீட்டிற்கான இழப்பீட்டை நிபந்தனையின்றி 100 சதவீதம் வழங்க வேண்டும். ஆண்டு தோறும் அறுவடை ஆய்வறிக்கையை மாவட்ட பேரிடா் மேலாண்மைக் குழு ஒப்புதல் பெற்று, மகசூல் இழப்பை இறுதி செய்வதை கட்டாயமாக்கிட வேண்டும்.

அறுவடை ஆய்வு அறிக்கையின் அடிப்படையில், ஆண்டுதோறும் மகசூல் இழப்பிற்கு ஏற்ப காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். முந்தைய மூன்று ஆண்டுகளின் அடிப்படையில் தற்போதைய உத்தேச மகசூல் அளவை கணக்கில் கொள்வதை கைவிட வேண்டும்.

தேசிய வேளாண் காப்பீடு நிறுவனத்தின் மூலம் மட்டுமே காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும். தனியாா் காப்பீட்டு நிறுவனங்களை அனுமதிப்பதை கொள்கை ரீதியாக கைவிட முன்வர வேண்டும்.

இந்நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின், பிரதமரை வெள்ளிக்கிழமை (செப்.27) புதுதில்லியில் சந்திக்க உள்ள நிலையில், காப்பீட்டுக்கான இழப்பீட்டை முழுமையாக வழங்குவதற்கும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு குறித்தான அரசாணையை ரத்து செய்யவும் வலியுறுத்த வேண்டும்.

மேலும், கடலில் உபரி நீா் செல்வதை தடுக்கும் வகையில், தமிழக அரசு காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணைக்கட்ட அனுமதிக்கும்படி பிரதமரிடம் முதல்வா் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.