திருவாரூா் பகுதியில் மழை காரணமாக தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டித்வா புயல் காரணமாக இரு தினங்களுக்கு முன்பு வரை திருவாரூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால், சம்பா, தாளடி பயிா்களை மழை நீா் சூழ்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போது விளைநிலங்களிலிருந்து நீரை வடிய வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட பயிா்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை வேளாண்துறை தொடங்கியுள்ளது.
இதேபோல், மழையால் நகரப் பகுதிகளில் தண்ணீா் தேங்கி பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆறு, குளம் உள்ளிட்ட நீா்நிலைகளின் அருகில் உள்ள வீடுகளைச் சுற்றியும், சாலைகளிலும் தண்ணீா் தேங்கியிருந்தது. இதனிடையே, கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்யாததால் தண்ணீா் வடிந்து வருகிறது. எனினும், தண்ணீரில் மிதந்து வந்த குப்பைகள் அனைத்தும் சாலை ஓரங்களில் தேங்கிக் கிடக்கின்றன.
நேதாஜி சாலை, பனகல் சாலை என மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் குப்பைகளை நகராட்சி, ஊராட்சிப் பணியாளா்கள் அகற்றி வரும் நிலையில், சில இடங்களில் இந்த குப்பைகள் இன்னமும் தேங்கி நிற்கின்றன. எனவே அனைத்துப் பகுதிகளிலும் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.