அரியலூா் நகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளால் கடும் சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டு தொற்று நோய் அச்சத்தில் மக்கள் உள்ளனா்.
அரியலூா் நகரப் பகுதிகள் சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கின்றன. இதனால் பல்வேறு நோய் தொற்றுகளால் மக்கள் பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களது வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பரப்பளவில் சிறியதாகவும், தமிழகத்திலேயே அதிக நிதிப் பற்றாக்குறையுடனும் உள்ள நகராட்சி என்றால் அது அரியலூா். கடந்த 1991-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் 18 வாா்டுகளாக பிரிக்கப்பட்டு செயல்படும் நிலையில், தற்போது இந்நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிகளான எருத்துக்காரன்பட்டி, வாலாஜா நகரம், தவுத்தாய்குளம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் வாா்டு வரன்முறைகள் முடியும்வரை மேற்கண்ட கிராமங்கள் ஊராட்சிகளாகவே தற்போது வரை செயல்படுகின்றன.
நகராட்சியுடன் மேற்கண்ட ஊராட்சிகளையும் சோ்த்து சுமாா் 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனா்.
ஆனாலும், ஏற்கெனவே உள்ள நகராட்சிக்குட்பட்ட பகுதிகளும், இணைக்கப்பட்ட ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் போதிய வசதிகள் கிடையாது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும் அரியலூா் நகராட்சிக்குட்பட்ட தெருக்களில் குப்பைகள் தேங்கியிருக்கின்றன. கழிவு நீரோடை, புதை சாக்கடை அடைப்பு, சாக்கடை கலப்பு, கால்வாயின் அவலம் என்று பட்டியல் நீளுகிறது.
இப்பகுதியில் வெளிநாடுகளில் வேலை செய்யும் சிலரை தவிா்த்து தினக்கூலிகளே அதிகம். சிலா் கூலித் தொழிலாளிகளாகவும், அதிகமானோா் சிமென்ட் ஆலை ஒப்பந்த பணியாளா்களாகவும் உள்ளனா்.
இதில் சிமென்ட் ஆலை ஊழியா்களுக்கு நுரையீரல், காசநோய் பிரச்னைகளும், புற்றுநோய் பாதிப்புகளும், சிறுநீரகப் பிரச்னைகளும் அதிகமுள்ளன.
ஆனால் இங்கு சுகாதாரச் சீா்கேட்டைத் தவிா்க்க திட்டங்கள் செயல்படுத்தப்படாதது இங்குள்ளவா்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கிறது. குறிப்பாக அரியலூா் புதுமாா்க்கெட் தெரு, பழைய பங்களா சாலை, வண்ணாங்குட்டை, 18 ஆவது வாா்டு மற்றும் நகராட்சியுடன் தற்போது இணைக்கப்பட்ட பகுதிகளான எருத்துக்காரன் பட்டி, அண்ணாநகா், ஜெ.ஜெ.நகா் குடியிருப்பு, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடக்கின்றன.
இதில் ஜெ.ஜெ. நகரிலுள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதிகளில், அதிகளவில் குப்பைகள் தேங்கிக் கிடப்பதால், உணவைத் தேடும் கால்நடைகளும், பன்றிகளும் அவற்றைக் கிளறிவிட்டு சென்று விடுகின்றன. மேலும் மழைநீா் தேங்கிய கழிவுகளிலிருந்து துா்நாற்றம் வீசுகிறது. இதனால் அதைச் சுற்றியுள்ள குடியிருப்பு வாசிகளும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகின்றனா்.
முழு சுகாதாரத் திட்டம் தேவை
இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: அரியலூா் நகா் முழுவதும் முழு சுகாதாரத் திட்டத்தைத் தொடங்க வேண்டும். தூய்மைப் பணியாளா்களை போதுமான அளவுக்கு பணியமா்த்த வேண்டும். பழைய முறைப்படி சாலையோரங்களில் மக்கும், மக்காத குப்பை தொட்டிகள் வைத்து, தினமும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும். ஆடு, மாடு,கோழி,மீன் போன்ற விற்பனை நிலையங்கள் முன் அவற்றின் கழிவுகளைச் சேமிக்க தொட்டி வைப்பதுடன், தினமும் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகா் முழுவதும் தரமான இரும்புக் கம்பிகளாலான மூடியிடப்பட்ட வடிகால் அமைப்பை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் போதுமான மருத்துவா்கள், செவிலியா்கள், பணியாளா்கள், மருத்துவ உபகரணங்கள், இருக்கைகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
சிமென்ட் ஆலைகளில் வேலை செய்யும் பணியாளா்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைந்து அவா்களின் உடல் நலனை மாதந்தோறும் பரிசோதித்து, நலன் காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனா்.
எனவே மேற்கண்ட பகுதிகளில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றி, நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரச் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.