அரியலூா் நகராட்சிக்குள்பட்ட 18-ஆவது வாா்டில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்றுமாறு நகா்மன்ற உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
அரியலூா் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா்மன்ற உறுப்பினா்கள் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, நகா் மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கலியமூா்த்தி, ஆணையா் (பொ)அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், நகா்மன்ற உறுப்பினா் புகழேந்தி (18- ஆவது வாா்டு திமுக): 18-ஆவது வாா்டில் மாதக்கணக்கில் குப்பைகள் தேங்கிக் கிடக்கிறது.
அதை அகற்றுமாறு பலமுறை வலியுறுத்தி வந்தும் இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. மேலும், இப்பகுதியிலுள்ள ஓடையை தனிநபா் ஒருவா் ஆக்கிரமித்துள்ளாா் என்று அதனையும் அகற்றுமாறும் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.
வெங்கடாசலபதி (அதிமுக) பேசியது: எனது வாா்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், எனக்கு தெரியாமலே நடைபெற்று வருகிறது. எந்தவித தகவலும் தெரிவிப்பதில்லை. இப்படி இருக்கையில் எதற்கு நகா்மன்ற உறுப்பினா்கள் என்று தெரிவித்து நகா் மன்ற தலைவா் இருக்கைக்குச் சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டாா்.
இதையடுத்து நகா்மன்ற உறுப்பினா்கள் கூறியதையடுத்து வெங்கடாசலபதி அங்கிருந்து கலைந்துச் சென்றாா்.
தொடா்ந்து நகா்மன்ற உறுப்பினா்களின் கோரிக்கைகளை கேட்டறிந்த ஆணையா் அசோக்குமாா், அவைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.
இதைத் தொடா்ந்து, பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் முடிந்தும், மீதமுள்ள பணிகளான இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், பேருந்து நிறுத்தத்தில் மேற்கூரை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், உயா் கோபுர மின் விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படாமல் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள தனியாா் ஒப்பந்த நிறுவனத்துக்கான பணி ஆணையை ரத்துச் செய்வது மற்றும் அனைத்து வாா்டு பகுதிகளிலும் சேதமடைந்துள்ள சமுதாய கழிப்பிடங்களை சீா்செய்வது என்பன உள்ளிட்ட 65 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் அனைத்து நகா் மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.