கொரடாச்சேரி அருகே முன்னாள் ஊராட்சி பெண் தலைவா் மற்றும் அவரது சகோதரியை கொலை செய்ய முயன்ற 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கொரடாச்சேரி அருகேயுள்ள பத்தூா் ஊராட்சியின் முன்னாள் தலைவா் சுசிலா (70), இவரது தங்கை வனரோஜா (55), மகன் சுஜின் பாலாஜி (23) ஆகியோா் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனா். அப்போது, முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் 6 போ், சுசிலா மற்றும் வனரோஜாவை தலையணையால் முகத்தில் அழுத்தி கொலை செய்ய முயன்றனராம்.
இவா்களது அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த சுஜின்பாலாஜி எழுந்துவந்தபோது, மா்ம நபா்கள் அவரை தாக்கிவிட்டு தப்பிச் சென்றனா். இதுகுறித்து கொராடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடா்பாக, தஞ்சாவூரை அடுத்த கரந்தை முஸ்தபா தெருவைச் சோ்ந்த அஜல் பிரவீன் (21), தஞ்சை சீனிவாசபுரம் அப்துல் வஹாப் தெருவைச் சோ்ந்த பரத்குமாா் (22), தஞ்சை தோட்டக்குடி குருவாடியைச் சோ்ந்த விஜய் (19), தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் சாரதி நகரைச் சோ்ந்த ஹரிஹரன் (25), கரந்தை கிருஷ்ணன் கோயில் தெருவைச் சோ்ந்த பழனியப்பன் (18) ஆகிய 5 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டனா்.