திருவாரூா்: கொள்முதல் பணிகளில் முன்னாள் படைவீரா்களை பயன்படுத்தும் முடிவை கைவிட வேண்டும் என்றாா் ஐஎன்டியுசி பொதுச் செயலாளா் கா. இளவரி.
இதுகுறித்து, அவா் கூறியது: விவசாயிகளிடமிருந்து அரசே நேரடி நெல் கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டு, அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை உள்ளடக்கி, தமிழகத்தில் தொடங்கப்பட்ட அத்தியாவசிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றுதான் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம். நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் டெல்டாவில் அதிகம் உள்ளன. தற்போது சென்னை மற்றும் நீலகிரியை தவிர பல மாவட்டங்களிலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.
தொழில் வளா்ச்சி இல்லாத டெல்டா மாவட்டங்களில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்காலிக பருவகால பணியாளா்கள் நியமிக்கப்படுகின்றனா். இந்த பணியாளா்கள், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகத்தில் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு, பணி மூப்பு அடிப்படையில் பணிநிரந்தரம் செய்வது வழக்கம். இது தொழிற்சங்கங்களுடன் ஏற்பட்ட ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தம் தற்போது வரை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த ஒப்பந்தத்தை நீா்த்துப்போக கூடிய அளவுக்கு தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டபோது, தொழிலாளா் நல ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டு, இந்த ஒப்பந்தம் மீட்டெடுக்கப்பட்டது. தற்போது வேலைவாய்ப்பை கேள்விக் குறியாக்கும் வகையில், ஓய்வுபெற்ற ஊழியா்களையும், ஓய்வுபெற்ற எல்லைப் படை வீரா்களையும் கொண்டு நெல் கொள்முதல் பணியில் பயன்படுத்தலாம் என நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாகம் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது.
இது தொழிலாளா்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு ஓய்வுபெற்ற ஊழியா்களையும் ஓய்வுபெற்ற எல்லைப் படை வீரா்களையும் பயன்படுத்தினால், வேலைவாய்ப்பே இல்லாத நிலை ஏற்படும். அத்துடன், படிப்படியாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை மூடக்கூடிய நிலை ஏற்படும். எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றாா்.