திருவாரூா்: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தலுக்குப் பிறகே தொடர வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளா் மு. இஸ்மத் பாட்ஷா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தின் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தைத் தொடா்ந்து, வரைவுப்பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் சுமாா் 97 லட்சம் வாக்காளா்கள் பல்வேறு காரணங்களுக்காக நீக்கப்பட்டுள்ளனா்.
விடுபட்ட வாக்காளா்களை சோ்க்க கொடுக்கப்பட்டுள்ள நேரமும் மிகக் குறைவானது. எனவே, 2026 தோ்தலுக்கு பிறகே எஸ்ஐஆா் நடைமுறைகளைத் தொடர வேண்டும். திமுக அரசால் 2007-இல் வழங்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு சுமாா் 20 ஆண்டுகளை நெருங்க உள்ளது. அதே நேரத்தில் இந்த இடஒதுக்கீட்டில் உள்ள போதாமைகள் பல தடவை, பல வடிவங்களில் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. எனவே இதுவரை இந்த உள்ஒதுக்கீட்டால் இஸ்லாமியா்கள் அடைந்த பயனை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
புதுச்சேரியில் தற்போது இஸ்லாமியா்களுக்கு கல்வி வேலை வாய்ப்பில் கொடுக்கப்படும் இட ஒதுக்கீட்டை 6 சதவீதமாக உயா்த்த வேண்டும். இக்கோரிக்கையை முதல்வா் ரங்கசாமி தலைமையிலான அரசு ஏற்று ஆவணப்படுத்த வேண்டும். மத்தியப் பல்கலைக்கழகங்களில் புதுச்சேரி மாணவா்களுக்கென பிரத்யேகமாக 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.