சாகுபடி பணிகளுக்கு பிப்ரவரி இறுதி வரை தண்ணீா் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன், மழை பாதிப்புக்குள்ளான பயிா்களை முழுமையாகக் கணக்கெடுக்கவில்லை, கடந்த 4 ஆண்டுகளாக பயிா்க் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை, தற்போது மழையால் பாதிப்படைந்த பயிா்களுக்கு பாரபட்சமின்றி காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
நன்னிலம் ஜி. சேதுராமன்: டெல்டா மாவட்டங்களின் சாகுபடிப் பணிகளுக்காக, ஜூன் 12- இல் மேட்டூா்அணை திறக்கப்பட்டு ஜனவரி 28-இல் மூடப்படுவது வழக்கம். தற்போது மழையால் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாா்ச் மாதம் வரை அறுவடைப் பணிகள் நடைபெறும். எனவே, பிப்ரவரி இறுதியில் மேட்டூா் அணையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பேரளம் வி. பாலகுமாரன்: திருமீயச்சூா், போழக்குடி பகுதிகளுக்கு பாசனமாகவும், பேரளம், கொட்டூா் பகுதிகளுக்கு வடிகாலாகவும் விளங்கும் பேரளம் வாஞ்சியாறு நாணல்களால் தூா்ந்து போய் உள்ளன. எனவே, தலைப்பிலிருந்து முடிவு வரை முழுமையாக தூா்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீடாமங்கலம் மருதப்பன் : மன்னாா்குடி பகுதியில் உழவா் சந்தையை ஏற்கெனவே இருந்த இடத்திலேயே அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பா கொள்முதலில் ஊக்கத்தொகையை ரூ. 200 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
விவசாயிகள் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் பேசியது:
திருவாரூா் மாவட்டத்தில், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் நெல் பயிரானது 1,37,530 ஹெக்டோ் இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இலக்கையும் தாண்டி 1,45,991.6 ஹெக்டோ் பரப்பில் சாகுபடி நடைபெற்றுள்ளது. மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் 51,558 விவசாயிகளுக்கு ரூ.407.28 கோடி பயிா்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
குறுவைப் பருவத்தில் 378 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, சுமாா் 2,85,727 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கானத் தொகை சுமாா் ரூ.717.93 கோடி வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு 67,784 விவசாயிகள் பயனடைந்துள்ளனா் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியா்கள் சத்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வேளாண்மைத்துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) சரவணன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் சித்ரா, கோட்ட பொறியாளா் (வெண்ணாறு) ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.