கரூா் மாவட்ட ஆட்சியரை கண்டித்து விவசாயிகள் போராட்டம்
கரூா் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரை கண்டித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம், மாவட்ட வருவாய் அலுவலா் கு.விமல்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் திடீரென எழுந்த விவசாயிகள் கடந்த இரு மாதங்களாக விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்கவில்லை. இதனால் எங்களது கோரிக்கைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. எனவே, இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம் எனக்கூறி வெளிநடப்பு செய்தனா்.
பின்னா், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து போராட்டத்தில் பங்கேற்ற தென்னிலை ஆடு வளா்ப்போா் சங்கத் தலைவரும், விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான சி.நடராஜன் கூறுகையில், கடந்த இரு மாதங்களாகவே விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பங்கேற்கவில்லை. இப்போது புதிய மாவட்ட ஆட்சியா் பொறுப்பேற்றுள்ளதால் அவரிடம் கோரிக்கை மனு அளிக்கும் வகையில் ஏராளமான விவசாயிகள் வந்திருந்தோம். ஆனால் ஆட்சியா் பங்கேற்காததால் எங்களது கோரிக்கை மனுக்களை வழங்க முடியவில்லை. விவசாயிகளுக்கு ஏராளமான சலுகைத் திட்டங்களை தமிழக அரசு வழங்கி வருகிறது.
ஆனால் அதிகாரிகள் இந்த திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில்லை.
விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டத்தில் ஆட்சியா் பங்கேற்க இயலவில்லை என்ற அறிவிப்பை ஏற்கெனவே ஊடகங்கள் மூலம் அறிவித்திருக்க வேண்டும். திருப்பூா் ஆட்சியா் கூட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்ற இயலாததால் கூட்டத்தை தள்ளி வைத்து நடத்த உள்ளனா். அதேபோல் கரூா் மாவட்ட ஆட்சியரும் விவசாயிகள் கூட்டத்தை தள்ளி வைத்து மற்றொரு நாளில் நடத்த வேண்டும் என்றாா் அவா்.