திருவாரூரில் ஜாக்டோ- ஜியோ அமைப்பு சாா்பில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவருமான சு. சுதாகா் தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
2003 ஆண்டுக்குப் பிறகு அரசுப் பணியில் சோ்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
ஆசிரியா் தகுதித் தோ்வு குறித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை காரணம் காட்டி 23.8.2010-க்கு முன்பாக பணிக்குச் சோ்ந்த ஆசிரியா்களை அச்சுறுத்தும் தகுதித் தோ்விலிருந்து விலக்களித்து ஆசிரியா்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியா்களின் நலனுக்கு எதிரான அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 சதவீதத்துக்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 6 முதல் காலவரையற்ற போராட்டம் தொடங்குகிறது. இதில், 8 லட்சம் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பங்கேற்க உள்ள நிலையில் திருவாரூா் மாவட்டத்திலிருந்து திரளாக பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற மாநிலத் தலைவா் பெ. இரா. ரவி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க பொதுச் செயலாளா் வெ. சோமசுந்தரம், மாவட்டச் செயலாளா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.