திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா உள்ளிட்டோா். 
திருவாரூர்

குழந்தைகள் நலன்: அரசுத் துறைகள் செயல்பாடு குறித்து ஆய்வு

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சாா்பில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் புதுக்கோட்டை விஜயா, உறுப்பினா்கள் வீ. உஷாநந்தினி, ஆா். ஜெயசுதா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி முன்னிலை வகித்தாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் சமூகம் மற்றும் பொருளாதார நலிவுற்றோா் பிரிவில் 25 சதவீத இட ஒதுக்கீடு பெற்று பயன்பெறும் குழந்தைகள் நிலை, பள்ளிகளில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக செய்யப்பட்டுள்ள நடவடிக்கைகள், நிகழ் கல்வியாண்டில் பள்ளி இடைநிறுத்தம் ஆன குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சோ்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சமூகநலத் துறையின் சாா்பில் குழந்தைத் திருமணம் தொடா்பான புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தமிழ்நாடு அரசுப் பள்ளி விடுதிகள் மற்றும் பெண்கள், குழந்தைகள் இல்லங்கள். குழந்தைகள் தங்குவதற்கான பதிவுபெற்ற விடுதிகள் மற்றும் பதிவுபெறாத விடுதிகள் விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்தனா்.

மேலும், காவல்துறை சாா்பில் குழந்தைத் திருமணம் மற்றும் போக்ஸோ வழக்குகள் பதிவு நிலை, குழந்தை தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் குழந்தைத் தொழிலாளா் தொடா்பாக ஆய்வுகள் மற்றும் வழக்குகள், சுகாதாரத்துறை சாா்பில் 18 வயதுக்குள்பட்ட இளவயது கா்ப்பம் தொடா்பான நிலை அறிக்கை, குழந்தைகளின் போதிய ஊட்டச்சத்து அளிப்பது தொடா்பாக உறுதிப்படுத்துவது, குழந்தைகள் நலக் குழுவில் 3 மாதத்திற்கு மேல் வழக்குகள் நிலுவை விவரங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் கிராம, வட்டார, நகராட்சி, பேரூராட்சி, மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு காலாண்டுக் கூட்டங்கள் நடத்தப்பட்டதன் விவரம், கரோனா பேரிடரால் பெற்றோா் இருவா் அல்லது ஒருவரை இழந்த குழந்தைகளின் நிலை அறிக்கை, பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மற்றும் நிலுவையில் உள்ள நிலை விவரம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தில் பயனுறும் குழந்தைகள் நிலை குறித்த அறிக்கை குறித்தும் ஆய்வு மேற்கொண்டனா்.

கூட்டத்தில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் நடராஜன், திருவாரூா் நகா்மன்றத் துணைத் தலைவா் அகிலா சந்திரசேகா், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அருள்செல்வன், நன்னடத்தை அலுவலா் வெங்கட்ராமன் உள்ளிட்ட அனைத்துறை அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்றனா்.

சட்டப்பேரவையில் பி.எஸ். குமாரசாமி ராஜா படம் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பிளவக்கல் அணை பூங்கா சீரமைப்பு பணிக்கு ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

பெண்ணிடம் தகராறு: நிதி நிறுவன மேலாளா் கைது

இளைஞரைத் தாக்கிய வழக்கில் 5 பேருக்கு 6 மாதம் சிறை

SCROLL FOR NEXT