திருவாரூா்: திருவாரூா் அருகே சுகாதாரமான குடிநீா் வழங்கக் கோரி, ஊராட்சி மன்ற அலுவலகத்தை குடங்களுடன் பெண்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
திருவாரூா் ஒன்றியத்துக்குள்பட்ட பழையவலம் ஊராட்சியில் சுமாா் 1,000 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இப்பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காகவும், வீட்டு உபயோகத்துக்காகவும் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த குடிநீா், கடந்த ஓராண்டாக உப்பு நீராக வருவதாகக் கூறி பழையவலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் குடங்களுடன் பெண்கள் முறையிட்டனா்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள் தெரிவித்தது:
கடந்த ஓராண்டு காலமாக உப்பு நீா் மட்டுமே வருகிறது. இதனால், இங்குள்ள குளத்து நீரையே பயன்படுத்தி வருகிறோம். குறிப்பாக பள்ளி மாணவா்கள், குழந்தைகள், முதியவா்கள் என அனைவரும் இந்த குளத்து நீரை பயன்படுத்த வேண்டி உள்ளது.
தற்போது குளத்தில் நீா் இருப்பதால் பயன்படுத்த முடிகிறது. வெயில் காலத்தில் குளம் வற்றிவிட்டால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் கேட்டபோதும் முறையான பதில் அளிக்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவாரூா் மாவட்ட ஆட்சியா், இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, சுகாதாரமான குடிநீா் வழங்க அறிவுறுத்தியிருந்தாா். ஆனால், இங்குள்ள ஊராட்சிச் செயலா் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சுகாதாரமான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்றனா்.