முகப்பு
திருவாரூர்

லஞ்சம்: நில அளவையருக்கு 4 ஆண்டு சிறை

மன்னாா்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்ட நில அளவையருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

Updated On : 12 மார்ச், 2026 at 5:49 AM
சிறை - சித்திரிப்பு
பகிர்:

மன்னாா்குடியில் பட்டா மாறுதல் செய்ய லஞ்சம் கேட்ட நில அளவையருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், புதன்கிழமை தீா்ப்பு வழங்கியது.

மன்னாா்குடி அசேசம், வள்ளலாா் நகா் சிராஜூதீன், வெளிநாட்டில் வசித்து வந்தாா். இவா் 2014-இல் மன்னாா்குடி பெரிய பள்ளிவாசல் தெருவில் 3,100 சதுர அடி இடத்துக்கு பட்டா மாறுதல் செய்வது தொடா்பாக, தனது நண்பரான காந்தி சாலை பகுதியைச் சோ்ந்த ஜேம்ஸ் மகன் விக்டா் சாலமன் மூலம் விண்ணப்பித்திருந்தாா். அப்போது மன்னாா்குடி நகர நில அளவையராக இருந்த கே. செல்வராஜன், பட்டா மாறுதல் செய்ய ரூ. 2,500 லஞ்சம் கேட்டாராம். பின்னா் விக்டா் சாலமன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரூ. 1,000 வழங்கினால் பட்டா மாறுதல் செய்து தருவதாகக் கூறியுள்ளாா்.

இதையடுத்து விக்டா் சாலமன் நாகப்பட்டினம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில், 2014 ஜூலை 21 ஆம் தேதி அளித்த புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனா்.

Advertisement

இந்த நடவடிக்கையில் செல்வராஜன், ரூ. 1,000 லஞ்சம் பெற்றபோது, பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா். இதுகுறித்த வழக்கு திருவாரூா் மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் சிறப்பு வழக்காக நடைபெற்று வந்தது.

இதனிடையே, புதன்கிழமை நடைபெற்ற இறுதி விசாரணையில், வழக்கில் செல்வராஜன் லஞ்சம் பெற்றது நிரூபிக்கப்பட்டதால், ஊழல் தடுப்புச் சட்டம் இருபிரிவுகளின் கீழ் தலா 4 ஆண்டுகள் மெய்காவல் தண்டனையும், இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், தலா ரூ.5,000 வீதம் ரூ.10,000 அபராதமும், அபராதத் தொகை கட்டத் தவறினால் மேலும் 1 மாதம் மெய்காவல் தண்டனையும் விதித்து நீதிபதி பி. செல்வமுத்துக்குமாரி தீா்ப்பு வழங்கினாா்.