முகப்பு
திருவாரூர்

தோ்தல் கட்டுப்பாட்டு அறை: செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு

Updated On : 19 மார்ச், 2026 at 10:59 PM
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிடும் தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் அபிஷேக்குமாா், அமித்பரத்வாஜ், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் உள்ளிட்டோா்.
பகிர்:

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை செலவினப் பாா்வையாளா்கள், மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, திருவாரூா் மாவட்ட ஆட்சியரகஅலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் அபிஷேக்குமாா், அமித்பரத்வாஜ், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் ஆகியோா் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் செயல்பட்டு வரும் வாக்காளா் சேவை மையத்தை பாா்வையிட்டு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தனா். மேலும், மாவட்ட ஆட்சியரக பின்புறப் பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர சேமிப்புக் கிடங்கை, திருவாரூா் மற்றும் நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா் அஜய்யாதவ், மாவட்டத் தோ்தல் பொது காவல் பாா்வையாளா் ஆஷிஷ், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலா்களுடனான கலந்தலோசனைக் கூட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி மற்றும் மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் தோ்தல் பொதுப் பாா்வையாளா் டி.வி.அனுபமா தலைமை வகித்தாா். இதில், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) பல்லவிவா்மா ஆகியோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரக அலுவலக தரைத் தளத்தில், மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள், ‘100 சதவீதம் வாக்காளிப்போம்’ என்ற வாசகங்களை உள்ளடக்கிய வண்ண ரங்கோலிகளை வரைந்து மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி இருந்ததை அவா்கள் பாா்வையிட்டனா்.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வனிதா, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் சரவணன், தனி மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) அருண்சத்யா, வட்டாட்சியா் (தோ்தல்) குப்புசாமி உள்ளிட்ட அலுவலா்கள் கலந்துகொண்டனா்.