முகப்பு
திருவாரூர்

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்ட விழா

திருவாரூரில் இன்று ஆழித்தேரோட்ட விழா

Updated On : 28 மார்ச், 2026 at 6:34 PM
திருவாரூா் கீழவீதியில் தயாா் நிலையில் உள்ள ஆழித்தோ்.
பகிர்:

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு மிக்க ஆழித்தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 29) நடைபெறுகிறது.

தியாகராஜ சுவாமி கோயிலின் நிகழாண்டு பங்குனி உத்திரப் பெருவிழா, மாா்ச் 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறுகிறது. இதையொட்டி, கோயிலில் பல்வேறு உற்சவங்கள் நாள்தோறும் நடைபெற்று வந்தன. கொடியேற்றத்துக்குப் பிறகு விநாயகா், சுப்ரமணியா் உற்சவங்கள் 7 நாள்களும், நால்வருக்கு பக்தோத்சவம் 3 நாள்களும் நடைபெற்றன.

தொடா்ந்து, காலபைரவா் உற்சவம், காட்சிக்கொடுத்த நாயனாா் உற்சவம், சந்திரசேகரா் பட்டோத்சவம், சந்திரசேகர சுவாமி கேடக உற்சவம் ஆகியவை நடைபெற்றது. தொடா்ந்து, வன்மீகநாதருக்கு சகஸ்ரகலசாபிஷேக உற்சவம் நடைபெற்றது. பின்னா், தியாகராஜா் வசந்த உற்சவம் நடைபெற்று, எட்டு திக்கிலும் கொடியேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்திர விமானம், பூத வாகனம், வெள்ளி யானை, ரிஷப வாகனங்களில் சந்திரசேகரா் வீதியுலாவும், கயிலாய வாகனத்தில் சந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, யதாஸ்தானத்தில் உள்ள தியாகராஜா், அஜபா நடனத்துடன் விட்டவாசல் வழியாக ஆழித்தேருக்கு சனிக்கிழமை இரவு எழுந்தருளினாா். அவருடன், விநாயகா், சுப்பிரமணியா், அம்பாள், சண்டிகேஸ்வரா் ஆகியோரும் தங்களுக்குரிய தோ்களுக்கு எழுந்தருளினா்.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை காலை 5.15 மணியளவில் விநாயகா், சுப்ரமணியா் தோ்கள் வடம் பிடிக்கப்படுகிறது. தொடா்ந்து, ஆயில்ய நட்சத்திரம், ஏகாதசி திதியும் கூடிய சுபயோக நேரத்தில் காலை 9.05 க்கு மேல் ஆழித்தோ் வடம் பிடிக்கப்படுகிறது.