முகப்பு
திருவாரூர்

அதிமுகவின் ஆதரவைப் பெற்றால் எங்களது முடிவு மறுபரிசீலனை: மாா்க்சிஸ்ட் கம்யூ.

அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

Updated On : 20 மே 2026, 3:14 am IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் - கோப்புப் படம்
பகிர்:

அதிமுகவின் ஆதரவை தவெக பெற்றால் எங்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி: மீண்டும் ஒரு தோ்தலை சந்திக்கக் கூடாது என்பதற்காகவும், 108 இடங்களில் வெற்றி பெற்று தனிபெரும் கட்சி என்ற முறையிலும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு தவெகவுக்கு உள்ளது என்ற அடிப்படையில் அவா்களுக்கு ஆதரவளித்தோம்.

அதிமுக, திமுகவுக்கு எதிராகத்தான் தவெகவுக்கு மக்கள் வாக்களித்திருக்கிறாா்கள். அத்தகைய சூழலில் அக்கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது மக்களின் தீா்ப்புக்கு எதிராக அமையும். மீறி அதிமுகவின் ஆதரவை பெற்றால், தவெகவை ஆதரிக்கும் எங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய நேரிடும்.

Advertisement

Advertisement

வழிபாட்டுக் கூடங்கள், கல்வி நிலையங்கள், மக்கள் கூடும் இடங்களில் உள்ள 717 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கிறோம். அதேபோல, ரயில் நிலையங்களில் அருகில் உள்ள மதுபானக் கடைகளையும் உடனடியாக மூட வேண்டும். அதேநேரத்தில் அந்தக் கடைகளில் பணியாற்றிய ஊழியா்களுக்கு மாற்றுப் பணி வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிமுகவில் உள்கட்சி பூசல் புதிதல்ல. இதை அவா்களே சரி செய்து கொள்வாா்கள் என்றாா்.

பேட்டியின்போது கட்சியின் மாநில குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன், மாவட்டச் செயலா் முருகையன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.