ஆன்மிக மணத்துடன் ஸ்ரீ குருநானக் ஜயந்தி
மூக நல்லிணக்கம், சகோதரத்துவத்தை வலியுறுத்தியவர் சீக்கியர்களின் முதல் குருவான ஸ்ரீ குருநானக் தேவ் ஜி. இவரது ஜயந்தி விழா தில்லி மாநகர் தெருக்களில் பஜனை, மேளதாளம் முழங்க சிறப்பாக வியாழக்கிழமை கொண்டாடப்ப
மூக நல்லிணக்கம், சகோதரத்துவத்தை வலியுறுத்தியவர் சீக்கியர்களின் முதல் குருவான ஸ்ரீ குருநானக் தேவ் ஜி.
இவரது ஜயந்தி விழா தில்லி மாநகர் தெருக்களில் பஜனை, மேளதாளம் முழங்க சிறப்பாக வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
""அரசர்களும், பேரரசர்களும் நிறைந்த செல்வத்தையும், பரந்த தேசத்தையும் பெற்றிருந்தாலும்கூட இறைவனின் அன்பு நிறைந்த ஒரு எறும்புடன் அவற்றை ஒப்பிடமுடியாது.
பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை; திருப்தியிலும் சிறந்த இன்பம் வேறில்லை; ஆசையைவிட பெரிய தீமை இல்லை; கருணையிலும் சிறந்த அறம் இல்லை; மன்னிப்பதை விட சக்திமிகு ஆயுதம் ஏதும் இல்லை'' என்று அருளுரை வழங்கிய ஸ்ரீ குருநானக் தேவ் ஜி, சீக்கியர்களின் புனித குருவாகப் போற்றப்படுபவர்.
தற்போது பாகிஸ்தானில் உள்ள ராய்போய்டி தல்வந்தியில் 1469-ம் ஆண்டு கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில் அவதரித்தார் குருநானக். இயற்கையிலேயே ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவராகவும், ஏழைகளுக்கு உதவும் மனம் படைத்தவராகவும் திகழ்ந்தார்.
"வை' எனும் நதியில் நீராடியபோது புதுவித ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தார். ஜாதி, நிறம், மதம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவர் கடவுள் என்று கூறி, அதன் தத்துவ முத்துக்களை மக்களிடம் போதித்தார். சீக்கிய மதத்தைத் தோற்றுவித்து புனித நூலான "குரு கிரந்த் சாகிப்'பை எழுதியவர். 1539-ம் ஆண்டு செப்.22-ம் தேதி முக்தியடைந்தார்.
அவருடைய ஜயந்தியை உலகமெங்கும் வாழும் சீக்கியப் பெருமக்கள் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுவது வழக்கம். மத நல்லிணக்க விழாவாகவும் கொண்டாடி வருகின்றனர். சீக்கியர்கள் அதிகம் வாழும் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் இந்த விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு குருநானக் ஜயந்தி விழா வியாழக்கிழமை உலகமெங்கும் உள்ள சீக்கிய குருத்துவாராக்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. தலைநகர் தில்லியில் இந்த விழாவை சீக்கியர்கள் சிறப்பு ஊர்வலத்துடன் கொண்டாடினர்.
குருத்துவாராக்களில் அதிகாலையில் சிறப்பு பஜனை, வழிபாடுகள் நடைபெற்றன. குருத்துவாராவில் இருந்து ஆன்மிக ஊர்வலம் புறப்பட்டு பல்வேறு தெருக்களின் வழியாகச் சென்றது.
ஊர்வலம் செல்லும் பாதைகளில் சீக்கிய இளம் பெண்களும், இளைஞர்களும் தரையைப் பெருக்கியபடி முன்னே செல்ல கொட்டு முரசும், பேண்ட் வாத்தியங்களையும் இசைத்தவாறு இசைக் கலைஞர்கள் பின்னே சென்றனர்.
பாஞ்ச் பியாராஸ் எனும் 5 சீக்கியர்கள் தலைமையில் நிஷான் சாகிப் எனும் சீக்கிய மதத்தின் திருக் கொடியைக் கைகளில் பிடித்தபடி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் சென்றனர். அவர்களுக்குப் பின்னே கூர்மையான வாளைக் கையில் ஏந்திய படி இளைஞர்கள் தொடர்ந்தனர். அவர்கள் சிறப்பு உடை அணிந்திருந்தனர்.
பஜனை கீர்த்தனைகளை சீக்கியப் பெரியவர்கள் மனம் உருகப் பாடினர். அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் புனித நூல் வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பல்லக்கைச் சுற்றி பெண்கள் பஜனைப் பாடல்களை பாடியவாறு சென்றனர். ஊர்வலத்தில் பல்லக்கில் எடுத்து வரப்பட்ட குரு கிரந்த் சாகிப்பை சீக்கிய ஆண்களும், பெண்களும் இரு கரம் கூப்பி பயபக்தியுடன் வணங்கி வழிபட்டனர். தெருக்களின் சந்திப்புகளில் ஆங்காங்கே சீக்கியர் சமூக உணவு வகைகள் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்து, முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தில்லியில் உள்ள பங்களா சாஹிப் குருத்துவாரா, ரேகாப்கஞ்ச் குருத்துவாரா, சாந்தினிசௌக் சீஸ்கஞ்ச் குருத்துவாரா உள்ளிட்ட பிரதானக் குருத்துவாராக்களில் சீக்கியர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தவிர, தில்லியின் தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் உள்ள பிற குருத்துவாராக்களிலும் சிறப்பு பஜனை, வழிபாடுகள் 5 முறைகள் நடைபெற்றன. முன்னதாக குருத்துவாராக்களில் குரு கிரந்த் சாகிப்பை சீக்கியர்கள் பயபக்தியுடன் வாசித்தனர்.