நினைவுகூர்கிறார் பி.சுப்பராமன் பாகவதர்
உலக நாடுகளின் தலைநகரங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் மகோன்னதம் பெற்றதாக இருக்கின்றன. அதன்படி, வரலாற்றுப் பெருமையும், புராதன சிறப்பும் தன்னகத்தே அமையப்பெற்ற ஒரு நகரம்தான் பழம் பெருமைக்குரிய பாரத தே
உலக நாடுகளின் தலைநகரங்கள் ஒவ்வொன்றும் ஏதாவது ஒரு வகையில் மகோன்னதம் பெற்றதாக இருக்கின்றன. அதன்படி, வரலாற்றுப் பெருமையும், புராதன சிறப்பும் தன்னகத்தே அமையப்பெற்ற ஒரு நகரம்தான் பழம் பெருமைக்குரிய பாரத தேசத்தின் தலைநகரான தில்லி மாநகர்.
5 ஆயிரம் ஆண்டுகள் பழைமைக்குரிய நகராகக் கருதப்படும் இது, மகாபாரத இதிகாசத்தில் இந்தரப்பிரஸ்தம் எனும் பெயரில் பாண்டவர்களால் நிர்மாணிக்கப்பட்ட நகர் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.
ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது அவர்களின் தலைநகராக அமைந்தது கொல்கத்தாதான். லண்டன் தேம்ஸ் நதி போன்று கொல்கத்தாவின் ஹெüரா நதியும் அதனை ஒட்டிய துறைமுக அமைப்பும் ஆங்கிலேயர்களுக்குப் பிடித்துப்போனது.
நாளடைவில் இந்நகரைவிட்டு இந்தியாவின் மத்தியப் பகுதிக்குச் செல்லத் தீர்மானித்தனர். அவர்கள் தேர்ந்தெடுத்த இடம்தான், பழைய தில்லியின் புறநகர்ப் பகுதியான புது தில்லி ஆகும்.
இங்கிலாந்தின் கட்டடவியல் வல்லுநர் சர் லுட்யான்ஸ் வடிவமைத்ததன் பேரில் உருவானதே புது தில்லி. இன்று அந்நகரம் பல மாற்றங்களைப் பெற்றுள்ளது என்றாலும்கூட, தற்போதைய வாகன நெருக்கடி, ஜன நெருக்கடி, அடுக்குமாடிக் குடியிருப்பு அதிகரிப்பு எல்லாம் கால்நூற்றாண்டுக்கு முன்பு இருந்ததா, என்றால் இல்லையே!
50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தில்லிக்கும், தற்போதைய தில்லிக்கும் கலாசாரம், உடை, நாகரிகம், போக்குவரத்து வசதிகள், குடியிருப்பு வசதிகள் என பலவற்றிலும் ஏராளமான மாற்றங்கள் காணப்படுகின்றன. இதெல்லாம் இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அன்றைய தில்லி எப்படியெல்லாம் இருந்தது என்பது குறித்து தில்லியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக வசித்து வரும் தமிழரான பி. சுப்பராமன் பாகவதர் (80) நினைவு கூர்கிறார்...
""எங்களது பெற்றோரின் பூர்விகம் தஞ்சை மாவட்டம், திருவையாறு. எனது தந்தை ஏ.வி. பிரணதார்த்திஹர சாஸ்திரிகள், வேதங்கள் பயின்றவர். தெலுங்கு புரோகிதம் செய்து வந்தார். 1953-ம் ஆண்டில் அவர் புரோகிதப் பணிக்காகத் தில்லிக்கு வந்தார்.
நான் ஓராண்டு கழித்து தில்லி வந்தேன். அப்போது எனக்கு வயது 21. மத்திய அரசின் சட்ட அமைச்சகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தேன். அப்போது, சட்டம், நீதி, கம்பெனி நிர்வாகம் ஆகியவை சட்ட அமைச்சகத்தின் கீழ் இருந்தன.
தில்லியில் எம்.ஜி.எம். என்ற ஆங்கிலேயே நிறுவனம் இருந்தது. கரோல் பாக், மத்திய செயலகம், வடக்கு, தெற்கு அவென்யூ, லோதி ரோடு, சப்தர்ஜங் மருத்துவமனை, வெலிங்டன் ஹாஸ்பிடல், ஐ.என்.ஏ. காலனி ஆகியவையே அப்போது இருந்தன. தற்போதுள்ள ரயில் பவன் எதிரே ராணுவ அதிகாரிகள் வசிக்கும் பாசறை (பேரக்ஸ்) இருந்தது. ராணுவ வீரர்களுக்கான குடியிருப்பு கிரும்தி பிளேஸில் இருந்தது.
அப்போது சப்தர்ஜங் விமான நிலையம் மட்டும்தான் இயங்கி வந்தது. ஓரிரு விமானங்கள் மட்டுமே வந்து செல்லும். அதுவும் உள்நாட்டு விமானங்கள்தான். பன்னாட்டு விமான நிலையம் ஏதுமில்லை.
1954-55-ம் ஆண்டுகளில் தற்போதுள்ள "எய்ம்ஸ்' எதிரில்தான் அரசு சார்பில் ஏ, பி, குடியிருப்புகள் கட்டப்பட்டன. வடக்கு மருத்துவ என்கிளேவில் அரசுக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.
1957-ம் ஆண்டில் "சி பிளாக்' கட்டிக் கொடுத்தனர். லட்சுமிபாய் நகரிலும் அதாவது மேற்கு கித்வாய் நகரிலும் இரண்டு அறைகள் இருக்கும் வகையிலான குடியிருப்பு ஃபிளாட்டுகள் கட்டப்பட்டன.
கனாட் பிளேஸில் உள்ள இர்வின் ரோடில்தான் முதல் முதலாக பிள்ளையார் கோயில் கட்டப்பட்டது. அக்கோயிலில் ஆஞ்சநேயர் கோயிலும் இருந்தது. அதன் பிறகு சரோஜினி நகரில் விநாயகர் கோயில் கட்டப்பட்டது. 1957-ம் ஆண்டுவாக்கில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணி தொடங்கியது.
ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் பேருந்து போக்குவரத்து அதிகம் இல்லை. கித்வாய் நகரில் இருந்து தலைமைச் செயலகத்துக்கு ஓரிரு பேருந்துகள்தான் சென்று வந்தன. அதே போன்று, செங்கோட்டைக்கும் சில பேருந்துகள் இயக்கப்பட்டன. சாந்தினி சௌக்கில் துணிகள், வீட்டுக்குத் தேவையான சாமான்கள் விற்கப்பட்டன. இதனால், அங்குதான் பொதுமக்கள் அதிகம் செல்வர்.
கனாட் பிளேஸில் இருந்து செங்கோட்டைக்குக் குதிரை வண்டிகள் சென்று வந்தன. நாலணா தான் கட்டணம். அரைமணி நேரத்தில் போய் அங்கு வண்டி சென்றுவிடும். அப்போது, குதிரை வண்டியில் பயணம் செய்தது, இப்போது மெட்ரோ ரயில் பயணம் என்றாகிவிட்டது.
அதேபோன்று, 14 அணா கொடுத்தால் ஒரு சேர் (2 லிட்டர்) பால் கிடைத்தது. அதுவும் கறந்த பால்; எருமைப் பால் என்றால் ஒரு சேர் 12 அணா, அதுவே பசும்பால் என்றால் 14 அணாவாக இருந்தது. அரிசி இரண்டு சேர் ஒரு ரூபாய்க்கு விற்றது.
காய்கறிகூட கிலோ கணக்கில் இல்லாமல் சேர் அளவையிலேயே விற்கப்பட்டது. நாலணா கொடுத்தால் ஒரு சேர் காய்கறி கிடைக்கும். பேருந்து கட்டணம் எல்லாம் இரண்டு அணாதான். போக்குவரத்துக்கு சைக்கிள்தான் அதிகம் பயன்பாட்டில் இருந்தது. சைக்கிள் இல்லாத வீடுகள் குறைவாகவே இருந்தன.
1966-67-ஆம் ஆண்டில் ஆர்.கே.புரத்தில் இருந்து கிருஷி விஹார் செல்ல 15 பைஸô கட்டணம்தான் இருந்தது.
தில்லியில் அப்போது சென்னையைச் சேர்ந்த தமிழர்கள்தான் அதிகம் இருந்தனர். பெரிய அளவில் நிறுவனங்கள் ஏதும் இல்லை. எனினும், டாடா கம்பெனி, பிர்லா கம்பெனிகள் இருந்தன.
"சௌத் இந்தியன் கிளப்' என்ற அமைப்பு இருந்தது. ஜந்தர்மந்தரில் இருந்த இந்த இடத்தில் மாலையில் கேரம் போர்டு, சீட்டாட்டம் போன்றவை நடைபெறும். வேலைக்குச் சென்றுவிட்டு மாலையில் இந்த கிளப்புக்கு வரும் தென்னிந்தியர்கள் பொழுதைப் போக்கிவிட்டுச் செல்வதுண்டு. மாலை நேரத்தில் சிற்றுண்டியும் சுடச்சுட சுவையாக கிடைக்கும்.
அதே போன்று, கனாட் பிளேஸில் மெட்ராஸ் ஹோட்டல் இருந்தது. ஒரு சாப்பாடு எட்டணாவுக்குக் கிடைக்கும். போர்டிங், லாட்ஜிங் இரண்டுமே இருந்தன. தில்லியைச் சேர்ந்தவரின் "சிட்டர் சிங் மெஸ்' இருந்தது. இங்கேயும் தமிழர்கள் அதிகமாக சாப்பிட வருவர். விலை குறைவாகவும் இருந்ததால் அதிகமானோர் வருவர்.
1968-69-ல் சரோஜினி நகரில் "மஞ்சில் ரெஸ்டாரெண்ட்' இருந்தது. ஒரு மாதம் சாப்பாடுக் கட்டணம் வெறும் ரூ. 55தான். அலுவலகம் செல்லும் தென் இந்தியர்கள் பலர், இந்த ஹோட்டலில் மாதக் கணக்கு வைத்துச் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
அப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒருமுறை டி.கே.எஸ். சகோதரர்களின் நாடகம், சௌத் இந்தியன் கிளப் சார்பில் நடத்தப்படும். இந்தக் கிளப்பின் தலைவராக மக்களவைத் தலைவராக இருந்தவர் அனந்தசயனம் ஐயங்கார்.
சௌத் இந்தியன் கிளப் சார்பில் ஜி.என். பாலசுப்பிரமணியம், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், சித்தூர் சுப்பிரமணியம், ஆலத்தூர் பிரதர்ஸ், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோரது கச்சேரிகளும் ஆண்டுக்கு ஓரிரு முறை நடைபெறும்.
1955-58-ல் ஐ.சி.எஸ். பதவி முடிவுற்றது. சட்ட அமைச்சகத்தில் செயலராக இருந்த கே.வி.கே. சுந்தரம் கடைசி ஐ.சி.எஸ். பேட்ச் அதிகாரியாவார். 50 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 20 ஆயிரம் என்ற அளவில்தான் மக்கள் தொகை இருந்தது.
தற்போதைய "சௌத் எக்ஸ்டென்ஷன்' பகுதியில் டி.எல்.ஃஎப். நிறுவனத்தினர் பிளாட் போட்டு விற்றனர். ஒரு பிளாட் ரூ.1000-க்குதான் விற்றனர். 1959-60-ம் ஆண்டுகளில் அரசின் தில்லி மேம்பாட்டு ஆணையம் வந்ததால் டி.எல்.எப். அலுவலகம் மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
இதனால், அந்த நிறுவனத்திடம் கடைசியாக 3 பிளாட்டுகள் மட்டுமே பாக்கி இருந்தன. அவற்றை ரூ. 500-க்கு கொடுத்தும் அப்போது யாரும் வாங்க முன்வரவில்லை. பணத்திற்கு அவ்வளவு டிமாண்ட். இப்போதெல்லாம் அந்த பிளாட் 5 - 6 கோடி ரூபாய்க்கு விற்றால்கூட ஆச்சரியமில்லை.
1958-ல் சாஸ்திரி பவன் அருகே ரயில் பவன் கட்டடப் பணி தொடங்கியது. அதன்பிறகு வாயு பவன், உத்யோக் பவன் வந்தன. இப்படி பல மாற்றங்களைச் சந்தித்தாலும் தில்லி அதன் மகத்துவத்தை இன்றும் இழக்காமல் இருந்து வருவதுதான் மகிழ்ச்சிக்குரியதாக இருக்கிறது'' என்றார் பி. சுப்பராமன்.