முகப்பு
புதுதில்லி

தமிழர்களை ஒன்றுபடுத்தும் தமிழர் நலக் கழகம்!

தில்லியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் உள்ளன. அவற்றில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றி வரும் சில அமைப்புகளில் குறிப்பிடத்தக்கது "தமிழர் நலக் கழகம்'. தமிழர்களின் நலன

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:42 PM
பகிர்:

தில்லியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் உள்ளன. அவற்றில் "ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றி வரும் சில அமைப்புகளில் குறிப்பிடத்தக்கது "தமிழர் நலக் கழகம்'.

தமிழர்களின் நலனையும், அவர்களுக்கான சமூகப் பணியையும் ஆற்றவேண்டும் என்ற உயர் சிந்தையுடன் 1997-ல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் நலக் கழகம் இன்றைக்கு 500 உறுப்பினர்களுடன் வளர்ந்து நிற்கிறது.

"தமிழர் நலன் காப்பதை நோக்கமாகக் கொண்டு ஒரு அமைப்பை உருவாக்க மயூர் விஹார் ஃபேஸ் 3-ல் சில தமிழர்கள் முடிவு செய்தனர். அதையடுத்து, ஏ. புகழேந்தி உள்ளிட்ட 12 பேரால் தொடங்கப்பட்டதுதான் எங்கள் அமைப்பு. தில்லிவாழ் தமிழர்களை ஒருங்கிணைத்தல், ஏழைகளுக்கு உதவுதல், தமிழ்ப் பண்பாட்டை தில்லியில் பரவச் செய்தல் ஆகியவையே எங்கள் தலையாய நோக்கம். அனைத்துத் தமிழ் அமைப்புகளும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்ற திசைவழியில் செயல்பட்டு வருகிறோம்' என்று பெருமிதத்தோடு கூறுகிறார் தமிழர் நலக் கழகத்தின் தலைவர் ஏ. பிரமநாயகம்.

தமிழ் வகுப்புகள்

"மயூர் விஹார் பேஸ்-3-ல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை தமிழ் வகுப்புகளை நடத்தி வருகிறோம். இந்த வகுப்பில் பயில 150 குழந்தைகள் வரை பெயர் பதிவு செய்துள்ளனர்.

ஒன்றரை மணி நேரம் நடைபெறும் இந்த வகுப்பில் நொய்டா, தில்ஷாத் கார்டன், இந்தர்புரம், மயூர் விஹார் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 9 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவியர் தமிழ் படிக்க வருகின்றனர்.

பள்ளி ஆசிரியைகளாகப் பணியாற்றும் சுமதி கிருஷ்ணன், முத்துலட்சுமி ஆகியோர் சேவை மனப்பான்மையோடு இந்த வகுப்புகளை நடத்தி வருகின்றனர். ஆங்கில வழியிலோ, ஹிந்தி மொழியிலோ பயின்றாலும் தாய் மொழியான தமிழை நமது மாணவ, மாணவியர் மறந்துவிடக் கூடாது என்பதற்காகவே இந்த வகுப்புகளை நடத்தி வருகிறோம்.

மேலும் 10, 12-ம் வகுப்புகளில் பயிலும் தமிழ் மாணவ, மாணவியருக்குத் தேர்வு காலப் பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறோம்.

நூலகம் அமைக்கத் திட்டம்

மனித வாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழ்பவை நூலகங்கள். எனவே, நூலகம் அமைக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கங்களில் ஒன்று. நூலகத்துடன் கூடிய சிறிய அரங்கை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நூலகம் அமைப்பதற்காக டாக்டர் பி. ராமசாமி என்பவர் மூலம் 300 நூல்களைக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் தந்துள்ளார். வேறு சில நூலக ஆர்வலர்களும் நூல்களைத் தர தயாராக உள்ளனர். நூலகம் அமைப்பதற்கான நிதி திரட்டுவதிலும், இடம் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். இந்த முயற்சியில் எங்களுக்கு உதவ விரும்புவோர் 98711-33515, 98180-49819, 96507-80339 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று பிரமநாயகம் கூறினார்.

தில்லியின் பாரத விலாஸ்

மயூர் விஹார் தில்லியில் மயூர் விஹார் ஃபேஸ்-3 பகுதியை ஒரு குட்டி "பாரத விலாஸ்' என்றே கூறலாம். தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள், வங்காளிகள், குஜராத்திகள், ஒரிசா மாநிலத்தவர் என தேசத்தின் பல தரப்பட்ட மக்களும் வசிக்கும் பகுதி இது. இங்கு மட்டும் சுமார் 600 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன.

"தமிழ்க் குடும்பங்களுக்காக ஆண்டுதோறும் பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்தி வருகிறோம். அதில் ஆடவருக்கு கபடிப் போட்டியும், கயிறு இழுத்தல் போட்டியும், பெண்களுக்குக் கோலப் போட்டி, இசை நாற்காலிப் போட்டி ஆகியவையும், மாணவர்களுக்கு ஓவியப் போட்டி, நடனப் போட்டி, கட்டுரைப் போட்டிகளும் நடத்துகிறோம். எச்.டி.எப்.சி. வங்கி அதிகாரி எம். ராமச்சந்திரன், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த எஸ். பாலசுப்பிரமணியம், பி. ஸ்ரீதர் போன்றவர்கள் இந்நிகழ்ச்சிகளுக்குப் பொருளுதவி செய்து வருகின்றனர்.

14 ஆண்டுகளாக முக்கிய பிரமுகர்களை இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் செய்கிறோம். சிறப்பு விருந்தினர்களை அழைத்து வருவதற்கு அகில இந்திய வானொலி நிலையத்தின் தமிழ் நிகழ்ச்சிப் பொறுப்பாளராகப் பணியாற்றும் பி. குருமூர்த்தி ஏற்பாடு செய்கிறார்.

குழந்தைகளுக்கானப் போட்டிகளுக்கு நடுவர்களை அழைத்து வந்து போட்டிகளை ஒருங்கிணைக்க சமூக ஆர்வலர் மீனா வெங்கி உதவி செய்கிறார்.' என்கிறார் பிரமநாயகம்.

இவ்வமைப்பின் செயலர் எம். ரமேஷ் கூறுகையில் "திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், நடன இயக்குநர் புலியூர் சரோஜா, இசை விமர்சகர் சுப்புடு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி. ராஜா, பசுமைத் தாயகம் அமைப்பைச் சேர்ந்த சௌமியா அன்புமணி, சர்வதேச பேரிடர் மேலாண்மையின் இந்தியத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ்., சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், சட்ட ஆணைய உறுப்பினர் வெங்கட்ரமணி, மக்கள் பாதுகாப்புப் படையின் துணைத் தலைமை வார்டன் பி. ராமசாமி, அம்பேத்ராஜன் எம்.பி., உள்ளிட்ட பலரும் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்' என்றார்.

"வெள்ளம், தீ, நிலநடுக்கம் போன்ற ஆபத்துகளில் இருந்து பொதுமக்கள் தங்களைக்  காத்துக்கொள்வது தொடர்பாக பேரிடர் மேலாண்மை முகாம் மற்றும் ஆயுர்வேத, அலோபதி, ஹோமியோபதி மருத்துவர்கள் பங்கேற்ற மெகா மருத்துவ முகாமும் நடத்தியிருக்கிறோம்.

"ஆதார்' தேசிய அடையாள அட்டைக்கான முகாம் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா மூலம் நடத்தப்பட்ட போது அதற்கான ஒருங்கிணைப்புப் பணியை மேற்கொண்டோம்' என்கிறார் இந்த அமைப்பின் பொருளாளர் ஆர். கண்ணன்.

6 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் அமைப்புகளிலேயே முதல் முறையாக சங்க உறுப்பினர்களின் முகவரியுடன் கூடிய கையேட்டை வெளி யிட்ட அமைப்பு என்ற சிறப்பு, தமிழர் நலக் கழகத்துக்கு உண்டு.

இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்தக் கையேட்டை புதுப்பித்து வெளியிட்டு வருவதாக இவ்வமைப்பினர் கூறுகின்றனர்.

இந்த அமைப்பின் துணைத் தலைவராக ஜி. லதா, இணைச் செயலர்களாக பி. சாய்நாதன், எம்.ருக்மணி, ஆலோசகராக ஏ. புகழேந்தி, ஒருங்கிணைப்பாளராக எஸ்.கே. மூர்த்தி மற்றும் நாராயணன், பாலசுப்பிரமணியன், எஸ். பாலாஜி, திரவியம் உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.