முகப்பு
புதுதில்லி

வாழ்வின் வழி காட்டி "குரான்'

புது தில்லி, செப். 23: மனித வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று வழிகாட்டும் இறைவனின் வேதம் "திருக்குரான்'. "குரான்' என்பதற்குக் "கடவுளின் வார்த்தைகள்' என்று பொருள். ஆகையால் இஸ்லாமியர்களின் புனி

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:36 PM
பகிர்:

புது தில்லி, செப். 23: மனித வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று வழிகாட்டும் இறைவனின் வேதம் "திருக்குரான்'. "குரான்' என்பதற்குக் "கடவுளின் வார்த்தைகள்' என்று பொருள். ஆகையால் இஸ்லாமியர்களின் புனித நூலாக குரான் போற்றப்படுகிறது.

இறைவனுக்கு, மனிதன் செலுத்த வேண்டிய கடமைகள் இதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. 1,500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த புனித நூலில் 114 அத்தியாயங்கள் (சூரா) உள்ளன. இவை மனிதர்களின் வாழ்க்கை நெறிமுறைகளைத் தெளிவாகக் குறிப்பிட்டு காண்பிக்கின்றன.

"குரான்' பொக்கிஷத்தை பகிர்ந்து கொள்வோம் என்ற தலைப்பிலான கண்காட்சி, தில்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 23) தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 25) வரை நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு அஹமதியா முஸ்லிம் ஜமாவத் என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

அரபு மொழியில் குரான் தோன்றியது. இது இப்போது உலகத்தின் பல்வேறு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மக்கள் தங்கள் தாய்மொழியில் கற்கும்போதுதான் இறைவனின் வழிகாட்டுதலைப் புரிந்து கொள்ள முடியும். அதற்காக குரான் புனித நூல் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

இந்தக் கண்காட்சியில் ஸ்பானிஷ், டச், மலாய், தமிழ், கன்னடம் உள்பட 73 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட குரான் பிரதிகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டும் இன்றி குரானில் மனித வாழ்க்கைக்குத் தெரிவிக்கப்பட்ட அருள்மொழிகள் பதாகைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. இதில், குரானில் தெரிவிக்கப்பட்டுள்ள  அமைதி, ஏழைகளுக்கு உதவுங்கள், நற்காரியங்கள் செய்தல், சமத்துவம், பெண்களுக்கான வாழக்கை நெறிமுறைகள், ஜிஹாத் போன்ற தலைப்புகளில் குரான் விளக்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.

அது மட்டும் இன்றி உலகம் சந்தித்து வரும் பேரழிவுகளான சுனாமி, எரிமலை, பூகம்பம் போன்றவை 1,500 ஆண்டு கால குரானில் அப்போதே தெரிவிக்கப்பட்டிருப்பது கண்காட்சியில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. உலகில் உலோகங்கள் பறக்கும் என்று குரானில் குறிப்பிட்டுள்ள வாசகமும் இதற்கு ஏற்ப விஞ்ஞான வளர்ச்சியில் தற்போது விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை படங்கள் குறிப்பிடுகின்றன.

இனி வரும் காலங்களில் விஞ்ஞான வளர்ச்சியால் ஏற்படும் மாற்றங்களும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்து வருகின்றன. பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் இந்தக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

பதாகைகளில் எழுதப்பட்டிருக்கும் புகைப்படங்களுடன் அடங்கிய வாசகங்கள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன. இந்தக் கண்காட்சியை வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். கண்காட்சியைப் பார்வையிட வருபவர்களுக்கு குரான் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் தெரிவிக்க வழிகாட்டிகளும் உள்ளனர்.

""மனித வாழ்க்கையில் தூய்மை, நேர்மை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குரானில் கூறப்பட்டுள்ளதை கண்காட்சி மூலம் தெரிந்து கொண்டேன்'' என்று பள்ளி மாணவர் தீபக் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹசன் கஹரி கூறியது:

இஸ்லாமியர்களின் புனித நூலான குரான், ஜம்முவில் சிறுபிரிவினர் பேசும் டோக்ரி மொழி உள்பட 22 சிறிய பிராந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது.

உலகம் முழுவதும் குரான் கண்காட்சியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். முதன்முதலில் லண்டனில் தொடங்கினோம். பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் கண்காட்சிகளை நடத்தினோம். இந்தியாவில் தில்லியில் தொடங்கியுள்ளோம். இதையடுத்து பஞ்சாப், பெங்களூர், சென்னை ஆகிய இடங்களிலும் நடத்த உள்ளோம்.  இது எங்களின் அமைதி வழிப் போராட்டம் என்றும் கூறலாம். குரானில் தெரிவிக்கப்பட்ட வழிமுறைகள் மக்களிடம் தவறாகச் சென்றடைந்துள்ளது.

 "ஜிஹாத்' என்பது தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு மனிதனுக்கு உள்ளே ஒளிந்திருக்கும் கெட்ட குணத்தை அழிக்க அவன்தான் முயற்சி எடுக்க முன்வர வேண்டும் என்ற அர்த்தத்தில் அந்தச் சொல் கூறப்பட்டுள்ளது. அதாவது ஒருவனிடம் உள்ள கெட்ட குணங்களைக் களைய வேண்டும் என்று பொருள்.

இது போன்ற விஷயங்களில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எந்த ஒரு மதமும் கிடையாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.