தங்கு தடையற்ற மின்சாரம்: மின் விநியோக நிறுவனங்களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்
தலைநகரில் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின் விநியோக நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்ஷித் கேட்டுக்கொண்டுள்ளார்.
தலைநகரில் அனைத்து இடங்களிலும் 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை மின் விநியோக நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஷீலா தீட்ஷித் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:
""தலைநகரில் பல இடங்களில் மின் விநியோக நிறுவனங்களால் மின் தடை ஏற்பட்டு வருவதாகத் தகவல் வருகிறது. இக் குறை ஏற்படாத வகையில் வாடிக்கையாளர்களுக்கு தங்களது கடமையை நிறைவேற்ற மின் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கடுமையான குளிர்காலத்தில் மின் தடையால் நுகர்வோரைப் பாதிக்கச் செய்யும் வகையில் மின் நிறுவனங்கள் செயல்பட்டால், அதைத் தில்லிப் பிரதேச அரசு அனுமதிக்காது.
இந்த மின் தடையால் மின் நுகர்வோருக்குத்தான் தேவையற்ற அசௌகரியம் ஏற்படும். தில்லியில் மின் துறை மின் பற்றாக்குறை ஏதும் எதிர்கொள்ளவில்லை. அதிகபட்சம் மின் தேவை 3,500 மெகாவாட்டாகத் தணிந்துள்ளது.
இதனால், 24 மணி நேரமும் தங்கு தடையற்ற மின்சாரத்தை நுகர்வோருக்கு வழங்க உரிய ஏற்பாடுகளை மின் விநியோக நிறுவனங்கள் செய்ய வேண்டும்.
கடுங்குளிர் காற்று வீசும் சமயங்களில் மின்தடை காரணமாக நுகர்வோர் பாதிக்கப்படக் கூடாது.
தலைநகரில் மின்தடை ஏற்படுவது தொடர்ந்தால் அது குறித்த நிலைமையைக் தீவிரமாகக் கண்காணித்து தலைமைச் செயலர், முதல்வர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வருமாறு மின் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' என்று முதல்வர் ஷீலா தீட்ஷித் தெரிவித்தார்.