பஸ்ஸில் பாலியல் வன்கொடுமை: ஒரு மாதம் ஆகியும் தொடரும் அச்சம்
தில்லியில், ஓடும் பஸ்ஸில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், அந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் சற்றும் குறையவில்லை.
தில்லியில், ஓடும் பஸ்ஸில் துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இறந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் முடிந்துள்ள நிலையில், அந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியின் தீவிரம் சற்றும் குறையவில்லை.
தில்லியில், இரவில் பஸ்களில் செல்வதை பெண்கள் தவிர்க்கும் நிலையைப் பார்க்கும் போது அதை உணர முடிகிறது.
அச்சம்பவத்திற்குப் பிறகு இரவு நேரத்தில் சாலைகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் போலீஸார் அதிக அளவில் பாதுகாப்பு பணியிலும், காவல் கட்டுப்பாட்டு அறை வாகனம் மூலம் அதிகமாக ரோந்துப் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் பஸ் நிறுத்தங்கள், பஸ் நிலையங்களில் பஸ்ஸýக்காக பெண்கள் காத்திருப்பதை பெரும்பாலும் காண முடிவதில்லை. பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்குப் பிறகு இரவு நேரங்களில் பஸ் பயணம் செய்வதை தவிர்த்து வருவதாக பல பெண்கள் கூறுகின்றனர்.
ஓடும் பஸ்ஸில் நடந்த பாலியல் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து, பல தரப்பிலும் இருந்து குரல்கள் எழுந்தன. தில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளதாக உச்ச நீதிமன்றமும் வேதனை தெரிவித்தது.
பணி நேரத்தை மாற்றிக் கொள்ளும் பெண்கள்: இரவு நேரங்களில் அரசுப் போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) சார்பில் இயக்கப்படும் பஸ்களிலோ, ஆட்டோக்களிலோ செல்வதற்கு அச்சப்படுவதாக பெண்கள் தெரிவித்துள்ளனர். வேலைக்குச் செல்லும் பெண்கள், இரவில் சீக்கிரம் வீடு திரும்ப ஏதுவாக பணி நேரத்தை மாற்றிக் கொண்டுள்ளனர்.
நிறுவனங்களில் உற்பத்தித் திறன் பாதிப்பு: தொழில்துறை அமைப்பான அசோசெம் மேற்கொண்ட ஆய்வின்படி, துணை மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்திற்குப் பிறகு இரு வாரங்களில் தில்லியிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள கால் சென்டர்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 40 சதவீதம் உற்பத்தித் திறன் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிறுவனங்களில் மூன்று ஒருவர் என்ற விகிதத்தில் பெண்கள் வேலையிலிருந்து விலகுகிறார்கள் என்றும் தெரிகிறது.
இது தொடர்பாக கரோல் பாக் பகுதியைச் ஹிந்துஸ்தானி இசை ஆசிரியை ஆர்த்தி பரஞ்சோதி கூறுகையில், ""நான் இசை வகுப்புக்குச் செல்வதாக இருந்தாலும் வேறு எங்கு செல்வதாக இருந்தாலும் தந்தையுடன் செல்வதுதான் வழக்கம்.
எனினும், எனது பையில் எப்போதும் சிறிய கத்தி இருக்கும். தற்காப்புக்காக மிளகாய்ப்பொடி, சிறிய பிளேடு, சிறிய கத்தி போன்றவற்றை பெண்கள் வைத்திருப்பதில் தவறு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை.
இரவில் சிறப்பு பேருந்துகள் தேவை: இரவு நேரங்களில் பெண்களின் பாதுகாப்பு கருதி "மகளிர் மட்டும்' சிறப்பு பஸ்களை அரசு இயக்க வேண்டும். நடத்துநரும், ஓட்டுநரும் மகளிரே இருக்கும் வகையில் பஸ்களை இயக்கலாம். தேவையான போலீஸ் பாதுகாப்பும் அளிக்க வேண்டும்' என்றார்.
மத்திய கலாசார அமைச்சக அதிகாரி சத்யா அசோகன் கூறுகையில், ""பாலியல் சம்பவங்களுக்குப் போதிய கல்வியறிவின்மை, முறையற்ற பழக்கவழக்கங்கள் ஆகியவைகூட காரணமாக உள்ளன. ஊடகங்கள் வணிக நோக்கில் செயல்படாமல் பாலியல் வன்முறை ஏற்படுவதை தடுக்கும் வகையில் செயல்படவேண்டும்.
தில்லியில் காவல் துறையை மேம்படுத்துவதுடன், விழிப்புணர்வுடன் இருக்க மக்களை பழக்கப்படுத்த வேண்டும்.
இரவு நேரங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். லாப நோக்கமின்றி கூடுதல் பஸ்களை இரவு நேரங்களில் இயக்க வேண்டும்' என்றார்.
நொய்டாவைச் சேர்ந்த இல்லத்தரசி-பரத நாட்டியப் பயிற்சியாளர் பவானி அனந்தராமன் கூறுகையில், "டிசம்பர் 16-ம் தேதி பாலியல் வன்முறைக்குப் பிறகு நடந்த போராட்டங்கள் விளைவாகப் பெண்கள் மனத்தில் தைரியம் ஏற்பட்டது போன்ற ஒரு சூழல் இருந்தது.
எனினும், வேலை நிமித்தமாகவோ, பிற விஷயங்களுக்காவோ வெளியே சென்றால், இரவு நேரத்தில் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்ற அச்ச உணர்வு இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக, இளம் பெண்கள் பெற்றோர் கூறாமலேயே இதை உணர்ந்துள்ளனர்.
மாலை வேளைகளில் நண்பர்களின் வீடுகளிலோ, வெளியிடங்களிலோ விருந்து, கேளிக்கை இருந்தால்கூட பள்ளி, கல்லூரி செல்லும் மாணவியர் அதைத் தவிர்ப்பதைக் காண முடிகிறது.
போலீஸாருக்கு பயிற்சி வேண்டும்: பாலியல் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களுடனான அணுகுமுறை தொடர்பாக காவல் துறையில் வேலைக்கு சேருவோருக்கு பிரத்யேக பயிற்சி அளிக்க வேண்டும்'' என்றார் அவர்.
நொய்டா, அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் செயலர் கிருஷ்ணமாசாரி கூறுகையில், "கடந்த மாதம் நடந்த பாலியல் வன்கொடுமைச் சம்பவத்திற்குப் பிறகு வெளி இடங்களில் இருந்து தில்லியில் வேலைக்கு வர பெண்கள் தயங்குகிறார்கள்.
பி.பீ.ஓ. துறையில் வேலை செய்யும் பெண்கள் இரவில் பணிபுரிவதைத் தவிர்த்து சீக்கிரம் வீட்டுக்குச் செல்வதையே விரும்புகின்றனர். பாதுகாப்பான வேலை இருந்தால் போதும். சம்பளத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.
இது போன்ற சம்பவம் ஏற்பட்டதற்கான பொறுப்பு ஒரு விதத்தில் எல்லோருக்கும் உண்டு. முன்பெல்லாம் ஒருவருக்கொருவர் சமூகப் பிணைப்பு இருந்தது. தற்போது அது குறைந்து வருகிறது. அண்டை வீட்டார் பற்றிய விவரம் கூட பலருக்கும் தெரிவதில்லை.
ஒரு பிரச்னை ஏற்படும்போது அதுபற்றி பெரிதாக ஊடகங்களில் வருகிறது. அதன் பிறகு அந்தப் பிரச்னையின் விளைவுகள் குறித்து தெரிவிக்க ஆர்வம் காட்டப்படுவதில்லை'' என்றார்.