புதுதில்லி

மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் இருவர் கைது

DIN

தில்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் நுழைய முயன்றதாக இரு இளைஞர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் (சிஐஎஸ்எஃப்) கைது செய்தனர். அவர்களிடம் உத்தரப் பிரதேச போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சிஐஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி வைஷாலி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை சிஐஎஸ்எஃப் வீரர்கள் வழக்கமான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். பயணிகளின் உடைமைகளை சோதனையிடும் "எக்ஸ் ரே' இயந்திரப் பகுதியில் வீரர்கள் பணியில் ஈடுபட்டிருந்தபோது,  பயணிகள் கொண்டு வந்த பையில் சந்தேகப்படும் விதமாக பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, பாதுகாப்பு வீரர்கள் அந்தப் பையை முழுமையாக சோதனையிட்டனர். அதில், துப்பாக்கித் தோட்டாவுடன் நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பையுடன் வந்த இரு இளைஞர்களை சிஐஎஸ்எஃப் வீரர்கள் மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் இருவரும் காஜியாபாத் பகுதியைச் சேர்ந்த ஆஷிஷ் குமார் (24), ராகேஷ் யாதவ் (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் ரயில் நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
அப்போது துப்பாக்கி வைத்திருந்தது ஏன் என்பதற்கு திருப்தியளிக்கும் வகையில் இருவரும் விளக்கம் அளிக்கவில்லை. அந்த துப்பாக்கி தங்களது பையில் எப்படி வந்தது? யார் வைத்தது? என்ற விவரம் தெரியவில்லை என இருவரும் தெரிவித்தனர்.
இதையடுத்து, இருவரும் மேல் விசாரணைக்காக உத்தரப் பிரதேச காவல் துறையினரிடம் ஒப்படைப்பட்டனர். இத்தகவல் உளவுத் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது என்றார் அந்த அதிகாரி.
சர்வதேச யோகா தினம் ஜூன் 21}ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, தில்லி, தேசியத் தலைநகர் வலய (என்சிஆர்) பகுதி மெட்ரோ ரயில் நிலையங்களில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT