ஆள்கடத்தல் வழக்கில் தேடப்பட்ட இருவர் கைது
தில்லியில் ஆள் கடத்தல் வழக்கில் ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
தில்லியில் ஆள் கடத்தல் வழக்கில் ரூ.50 ஆயிரம் வெகுமதி அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி வியாழக்கிழமை கூறியதாவது: மத்திய தில்லியில் உள்ள கமலா மார்க்கெட் பகுதியில் ஜி.பி. ரோடில் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாக 8 பேர் கடந்த 2013-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சையத்துல்லா அலி கியான் (43), அதியார் ஷெய்க் (33) ஆகியோர்தான் இக்கும்பலை வழிநடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களைக் கைது செய்ய தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர்கள் பிடிபடவில்லை. இதைத் தொடர்ந்து, அவர்களைக் கண்டுபிடிக்க உதவுவோருக்கு ரூ.50,000 வெகுமதி அளிக்கப்படும் என்று காவல் துறை அறிவித்தது.
இந்நிலையில், அந்த இருவரும் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் இருப்பதாக கடந்த மாதம் தகவல் கிடைத்தது. அவர்கள் அங்கு ஆள் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அவர்களைப் பிடிப்பதற்கு கொல்கத்தா போலீஸாரின் உதவியுடன்அந்த மாவட்டத்தில் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 14-ஆம் தேதி கியான் மற்றும் ஷெய்க் ஆகிய இருவரும் கொல்கத்தாவில் உள்ள சீல்தா ரயில் நிலையத்தில் பிடிபட்டனர்.
இதில் கியான் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏழை மக்களை ஏமாற்றி ஆள் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது. மேலும், அவர்களை ஷெய்க் மூலம் அவர் தில்லிக்கு அனுப்பி வந்துள்ளார். அவர்கள் இந்தத் தொழிலை கடந்த 10 ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர் என்றார் அந்த அதிகாரி.