ஷாதராவில் பட்டாசுகள் விற்றதாக வியாபாரி கைது: ரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
ஷாதரா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரகசியமாக பட்டாசுகள் விற்றதாக வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
புதுதில்லிஷாதராவில் பட்டாசுகள் விற்றதாக வியாபாரி கைது: ரூ.2 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்
ஷாதரா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரகசியமாக பட்டாசுகள் விற்றதாக வியாபாரியை போலீஸார் கைது செய்தனர்.
ஷாதரா மாவட்டத்தில் பொதுமக்களுக்கு ரகசியமாக பட்டாசுகள் விற்றதாக வியாபாரியை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து தில்லி காவல் துறை ஷாதரா துணை ஆணையர் நுபுர் பிரசாத் கூறியதாவது:
தில்லி, என்சிஆர் பகுதிகளில் பட்டாசுகள் விற்பனைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், தில்லி ஷாதரா மாவட்டம், ஃபர்ஷ் பஜார் பகுதியில் பொதுகக்களுக்கு ரகசியமாக விபின் (59) என்பவர் பட்டாசுகள் விற்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் மீது உரிய பிரிவுகளின் கீழ் ஃபர்ஷ் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது' என்றார் நுபுர் பிரசாத்.
தில்லி காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் மதுர் வர்மா கூறுகையில், "தலைநகரில் சட்டவிரோதமாக பட்டாசுகள் விற்பனை செய்ததாக 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,200 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு காவல் நிலையங்களில் 29 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பட்டாசுகள் விற்பனைத் தடையை அமல்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன' என்றார் அவர்.
பட்டாசுகள் விற்பனை செய்ததாக தில்லியில் வடக்குத் தில்லி மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோன்று, தென்மேற்கு மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக 368 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தபடியாக, ரோஹிணி மாவட்டத்தில் 344.5 கிலோ பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதேபோன்று, பட்டாசு விற்பனையைத் தடுக்க தவறியதாக புறநகர் மாவட்டம், மங்கோல்புரி காவல்நிலைய போலீஸார் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.