தில்லி காா் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட சோயப் மற்றும் மருத்துவா் நசீா் பிலால் மல்லா ஆகியோரது தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) காவலை மேலும் 4 நாள்களுக்கு நீட்டித்து தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
சோயப்புக்கு கடந்த டிச.5-ஆம் தேதி வழங்கப்பட்ட 10 நாள் காவல் முடிவடைந்த நிலையில், பாட்டியலா ஹெளஸ் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். இதே போன்று நசீருக்கு வழங்கப்பட்ட 7 காவல் முடிவடைந்த நிலையில், அவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, அவா்கள் இருவரையும் மேலும் 4 நாள்கள் காவலில் வைக்க முதன்மை மற்றும் அமா்வுகள் நீதிபதி அஞ்சு பஜாஜ் சந்தனா உத்தரவிட்டாா்.
தில்லியில் கடந்த நவ.10-ஆம் தேதி மருத்துவா் உமா் நபி வெடிபொருள்களுடன் ஓட்டி வந்த காா் செங்கோட்டை அருகே வெடித்த சம்பவத்தில் 15 போ் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.
குண்டு வெடிப்புச் சம்பவத்துக்கு முன்பாக நபிக்கு உதவிய சோயப்பை ஹரியாணாவின் ஃபரீதாபாதில் என்ஐஏ கைதுசெய்தது.
இதைத்தொடா்ந்து, இந்தச் சம்பவத்தில் முக்கிய மூளையாகச் செயல்பட்ட ஜம்மு-காஷ்மீா், பாரமுல்லாவைச் சோ்ந்தவரான மருத்துவா் பிலால் நசீா் மல்லாவை என்ஐஏ அதிகாரிகள் தில்லியில் கடந்த டிச.9-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதலின் சதித்திட்டத்தில் பிலாலுக்கும் பங்கு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காரை ஓட்டி வந்து துற்கொலை தாக்குதல் நடத்திய உமா் உன் நபிக்குத் தேவையான உதவிகளையும், தங்குவதற்கு அடைக்கலமும் இவா் அளித்துள்ளாா். மேலும், இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் தொடா்பான ஆதாரங்களை அழித்ததாகவும் இவா் மீது குற்றச்சாட்டு உள்ளது என என்ஐஏ தெரிவித்திருந்தது.