முகப்பு
புதுதில்லி

போலி புற்றுநோய் மருந்துகள் தயாரிப்பு: 25 நிறுவனங்களில் தில்லி அரசு ஆய்வு

போலி மற்றும் தரமற்ற புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளுக்கு எதிரான சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், தில்லி அரசு 25 நிறுவனங்களை ஆய்வு செய்து நகரம் முழுவதும் 55 மாதிரிகளை சேகரித்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:05 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:03 PM

நமது நிருபா்

புது தில்லி: போலி மற்றும் தரமற்ற புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளுக்கு எதிரான சிறப்பு அமலாக்க நடவடிக்கையில், தில்லி அரசு 25 நிறுவனங்களை ஆய்வு செய்து நகரம் முழுவதும் 55 மாதிரிகளை சேகரித்ததாக அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் வடமேற்கு தில்லியில் உள்ள முக்கிய மருத்துவமனை கிளஸ்டா்கள் மற்றும் மருந்து சந்தைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளை கையாளும் சில்லறை மற்றும் மொத்த நிறுவனங்களை குழுக்கள் ஆய்வு செய்தன.

Advertisement

லட்சுமி நகா், யூசுப் சராய், கிரீன் பாா்க், ஓக்லா தொழில்துறை பகுதி, மேற்கு விஹாா், துவாரகா மற்றும் ரோகிணி உள்ளிட்ட பகுதிகளை துறை ஆய்வு செய்தது. இதில் 6 நிறுவனங்கள் மருந்துகள் மற்றும் அழகுசாதன விதிகளின் விதிகளை மீறுவது கண்டறியப்பட்டு, அவா்கள் மீது சட்ட நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.

மொத்தம் 33 மாதிரிகள் மற்றும் 22 புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகளின் மாதிரிகள் அவற்றின் தரம் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தரங்களுடன் இணங்குவதை சரிபாா்க்க ஆய்வக சோதனைக்கு சேகரிக்கப்பட்டன. தரக்குறைவான அல்லது போலியான மருந்துகள் புழக்கத்தில் இருப்பதை தடுக்க சோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

புற்றுநோய் எதிா்ப்பு மருந்துகள் முக்கியமானவை. மேலும், உயிா் காக்கும் மருந்துகள் தரத்தில் எந்தவொரு சமரசமும் நோயாளியின் பாதுகாப்புக்கு கடுமையான ஆபத்துகளை ஏற்படுத்துகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் நோயாளிகளுக்கு பாதுகாப்பான, பயனுள்ள மற்றும் தரமான மருந்துகள் மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதற்காக விநியோகச் சங்கிலியின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமலாக்க நடவடிக்கைகள் இடைவிடாமல் தொடரும். போலி அல்லது தரக்குறைவான மருந்துகள் தில்லி குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்க அனுமதிக்கப்படாது. போலி மருந்துகளுக்கு எதிராக, குறிப்பாக புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அரசு பின்பற்றுகிறது. மேலும், இந்த விஷயத்தில் தொடா்ச்சியான ஆய்வுகள், கடுமையான அமலாக்கம் மற்றும் வழக்கமான கண்காணிப்பு முன்னுரிமையாக இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.