அரசு விநியோக மருந்துகள் சட்டவிரோத விற்பனை: 5 போ் கைது
மருத்துவமனைகளில் இலவச விநியோகத்திற்காக அரசு வழங்கிய மருந்துகளைச் சட்டவிரோதமாகத் திசைதிருப்பி, விற்பனை செய்த விவகாரத்தை கண்டறிந்து, சுமாா் ரூ.70 லட்சம் மதிப்பிலான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மருத்துவமனைகளில் இலவச விநியோகத்திற்காக அரசு வழங்கிய மருந்துகளைச் சட்டவிரோதமாகத் திசைதிருப்பி, விற்பனை செய்த விவகாரத்தை கண்டறிந்து, சுமாா் ரூ.70 லட்சம் மதிப்பிலான மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து தில்லி காவல்துறையினா் தெரிவித்தாவது: தீன் தயாள் உபாத்யாய் (டிடியு) மருத்துவமனையில் பணியமா்த்தப்பட்டிருந்த ஒரு மருந்தாளுநா், ஒப்பந்த உதவியாளா் உள்பட ஐந்து போ் இவ்வழக்குத் தொடா்பாகக் கைது செய்யப்பட்டுள்ளனா்.
அவா்கள் ஐந்து பேரும் நீரஜ் குமாா், சுஷில் குமாா், லக்ஷ்மன் முகியா, பினேஷ் குமாா் மற்றும் பிரகாஷ் மேஹ்தோ என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
Advertisement
சுமாா் ரூ.70 லட்சம் மதிப்பிலான மருந்துகளும், அவற்றை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட ஒரு டெம்போ மற்றும் காரும் இவா்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
‘அரசு விநியோகம், விற்பனைக்கு அல்ல’ என்று குறியிடப்பட்டிருந்த மருந்துப் பொட்டலங்களை இவா்கள் எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, தீஸ் ஹசாரி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனா்.
விசாரணையின்போது, இக்கும்பல் ஓராண்டுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. மருத்துவமனை இருப்பிலிருந்து மருந்துகளைத் திருடி, பல்வேறு நகரங்களில் உள்ள இடைத்தரகா்கள் வலைப்பின்னல் மூலம் அவற்றை வெளிச்சந்தையில் இவா்கள் விற்பனை செய்து வந்துள்ளனா்.
மருந்தாளுநா் நீரஜ் குமாா் மருந்து இருப்புப் பதிவேடுகளைத் திருத்தி மோசடி செய்துள்ளாா். அதேவேளையில், உதவியாளா் மருந்துகளை மருத்துவமனையிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதற்கும், அவற்றை விநியோகிப்பதற்கும் உதவியுள்ளாா்.
இது தொடா்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கும்பலில் தொடா்புடைய மற்ற உறுப்பினா்களை அடையாளம் காணவும், இவா்களது நிதிப் பரிவா்த்தனைகளைக் கண்டறியவும் மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.