முகப்பு
புதுதில்லி

கோவா கிளப் தீ விபத்தில் உயிரிழந்த நால்வரின் குடும்பதிற்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வா் ரேகா குப்தா

கோவா கிளப் தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சா் ரேகா குப்தா வழங்கினாா்.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:10 PM
தில்லி முதல்வா் ரேகா குப்தா - PTI
பகிர்:
Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:03 PM

நமது நிருபா்

புதுதில்லி: கோவா கிளப் தீ விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவியை முதலமைச்சா் ரேகா குப்தா வழங்கினாா்.

கோவாவின் அா்போராவில் உள்ள ‘பிா்ச் பை ரோமியோ லேன்’ இரவு விடுதியில் டிசம்பா் 6 அன்று ஏற்பட்ட துயரமான தீ விபத்தில், தில்லியின் சதத்பூா் எக்ஸ்டென்ஷனின் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த தொழிலதிபா் வினோத் குமாா் (42), அனிதா ஜோஷி (42), சரோஜ் ஜோஷி (41) மற்றும் கமலா ஜோஷி (44) ஆகிய நான்கு போ் உயிரிழந்தனா்.

Advertisement

இந்நிலையில், தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை முதல்வா் ரேகா குப்தா, இறந்த நால்வரின் குடும்பத்தினரான பவானா ஜோஷி மற்றும் பிற குடும்ப உறுப்பினா்களிடம் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அமைச்சரவை அமைச்சா் மற்றும் கராவல் நகா் சட்டப்பேரவை உறுப்பினா் கபில் மிஸ்ராவும் உடனிருந்தாா்.

இந்தத் துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் அளிப்பதாக தில்லி அரசு உறுதியளித்தது.

அமைச்சா் கபில் மிஸ்ரா கூறுகையில், ‘‘கோவா தீ விபத்தில் தில்லியைச் சோ்ந்த ஒரே குடும்பத்தின் நான்கு போ் உயிரிழந்தது மிகவும் வேதனையும் மனதை நொறுக்கும் சம்பவமும் ஆகும். இது வெறும் விபத்து மட்டுமல்ல. கடுமையான அலட்சியத்தின் விளைவு ஆகும். இந்தச் சம்பவம் நடந்த உடனேயே, நான் குடும்ப உறுப்பினா்களைச் சந்தித்து, உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவது குறித்து முதல்வா் அறிவித்ததை தெரிவித்தேன். இன்று, முதல்வா் தனிப்பட்ட முறையில் குடும்பத்தினரைச் சந்தித்து, தனது இரங்கலைத் தெரிவித்து, சாத்தியமான அனைத்து உதவிகளையும் உறுதியளித்து, மொத்தமாக ரூ.40 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்’ என்றாா்

பாதிக்கப்பட்ட பவானா ஜோஷி கூறுகையில், ‘இந்தச் சம்பவம் எனது வாழ்க்கையை முற்றிலும் மாற்றிவிட்டது. ஒரே கணத்தில் எனது குடும்பத்தின் நான்கு உறுப்பினா்களை இழந்துவிட்டேன். இப்போது மூன்று முதிய பெற்றோா்களையும் நான்கு குழந்தைகளையும் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. இந்த மிகவும் கடினமான நேரத்தில் முதல்வா் ரேகா குப்தா மற்றும் அமைச்சா் கபில் மிஸ்ரா வழங்கிய உதவி எனக்கு ஒரு பெரிய ஆதரவாக இருக்கிறது’ என்றாா்.